உலகின் மிகப்பெரிய பணக்காரரும், 197 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரருமான எலான் மஸ்க் பல தடுமாற்றத்திற்கு பின் டிவிட்டரை கையகப்படுத்திய நிலையில், முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடியான மாற்றங்களை டிவிட்டரும், டிவிட்டர் ஊழியர்களும் சந்தித்து வருகினர். குறிப்பாக புதிய தலைமை செயல் அதிகாரி தொடங்கி, 50 ஸ்பெஷல் ஊழியர்கள் அடங்கிய புதிய நிர்வாக குழு, ப்ளூ டிக் கட்டணம், பணி நீக்கம் என ரணகளமாக உள்ளது எனலாம்.
இதுவே பலரின் மத்தியிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது எனில், மறுபுறம் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவுடன் ட்விட்டர் நிறுவன பங்கானது நியூயார்க் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது.
இதனால் முதலீட்டாளர்களின் நிலை என்ன..? நியூயார்க் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற என்ன காரணம்? ஏன் இந்த திடீர் முடிவு? வாருங்கள் பார்க்கலாம்.
பங்கு சந்தையில் வெளியேற்றம்
அமெரிக்காவின் பங்கு சந்தை பரிவர்த்தனை ஆணையம் (SEC) வழங்கிய உத்தரவுகளுக்கு இணங்க, ட்விட்டர் நிறுவனம் நவம்பர் 8 அன்று நியூயார்க் பங்கு சந்தையில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது. இந்த முடிவு தற்செயலாக அமெரிக்காவின் இடைக்கால தேர்தல் சமயத்தில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க் - ட்விட்டர் - டீலிஸ்ட்
எலான் மஸ்க் - ட்விட்டர் இடையேயான பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு, ஒரு வழியாக இந்த ஒப்பந்தம் முடிவடைந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் பரிவர்த்தனை ஆணையம் இத்தகைய முடிவினை எடுத்துள்ளது.
எலான் மஸ்கிற்கு முழுமையாக சொந்தம்
இது குறித்து தாக்கல் செய்யும் குழு முன் வைத்த நிபந்தனைகளின் படி, நியூயார்க் பங்கு சந்தையில் இருந்து, ட்விட்டர் நிறுவனம் வெளியேறியுள்ளது. ட்விட்டரின் அனைத்து பங்குகளும் தற்போது எலான் மஸ்கிற்கு சொந்தமான ஒன்று. அமெரிக்காவின் பங்கு சந்தை பரிவர்த்தனை ஆணையம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பங்கு சந்தையில் இப்பங்கானது வெளியேறியுள்ளது.
டிவிட்டர் முதலீட்டாளர்கள்
இதன் மூலம் அனைத்து முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 54.20 டாலர் அளவிலான தொகையை பெற்றுள்ளனர். அனைத்திற்கும் மேலாக டிவிட்டர் நிறுவனம் தற்போது பங்குச்சந்தையில் இருந்து நீக்கப்பட்டதால் தனியார் நிறுவனமாக மாறியுள்ளது.
அக்டோபர் 28
டிவிட்டர் நிறுவனம் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்றப்படும் என்பது எலான் மஸ்க் நீதிமன்றத்தில் டிவிட்டரை வாங்க ஒப்புதல் அளித்த நாளிலேயே முடிவு செய்யப்பட்டது. இதனால் அக்டோபர் 28 ஆம் தேதியே டிவிட்டர் பங்குகள் வர்த்தகம் செய்வதில் இருந்து தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு பங்கின் விலை?
எலான் மஸ்க் வசம் முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ட்விட்டர் நிருவனத்தின் 9.2% பங்கினை விலைக்கு வாங்கினார். அதையடுத்து முழு பங்குகளையும் ஒரு பங்குக்கு 54.20 டாலருக்கு வாங்கினார். இதன் மூலம் 44 பில்லியன் டாலர் செலுத்தி நிறுவனத்தினை கையகப்படுத்தினார். ஆரம்பத்தில் ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
எலான் மஸ்க் வாங்கிய விலை
எலான் மஸ்க் இந்த பங்கினை வாங்குவதற்கு முன்பு, இந்த மைக்ரோ பிளாக்கிங் தளத்தின் பங்கு 75 டாலருக்கும் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் எலான் மஸ்க் ஒரு பங்கினை 54.20 டாலருக்கு வாங்கினார்.
ட்விட்டர் மீது வழக்கு
எனினும் இந்த தடை தற்காலிக தடையா அல்லது நிரந்தர தடையா என்பது குறித்தான முழு விவரங்கள் வெளியாகவில்லை. இது மீண்டும் எப்போது பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் என்பது குறித்தான எந்த விவரமும் வெளியாகவில்லை.
ஏற்கனவே முன்னறிவிப்பின்றி பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியதற்காகவும் அதற்குரிய இழப்பீடு எதுவும் கொடுக்கப்படாமல் இருந்ததற்காகவும் டிவிட்டர் நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications