சென்னை: உங்கள் வீட்டுக் கடனின் வட்டி விகிதம் குறையவில்லை என்பது குறித்து குழப்பமா.. இது பலரின் மனதிலும் இருக்கும் ஒரு கேள்விதான். இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்தால், வீட்டுக் கடன் வட்டி விகிதமும் குறைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், பல நேரங்களில் அது போன்று நடப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன, அவை என்ன என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் அதிகரிக்கும் போதோ அல்லது குறையும் போதோ நம் வீட்டுக் கடனின் ஃப்ளோட்டிங் வட்டி குறையும் அல்லது கூடும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதுவே ரெப்போ ரேட் 0.50 சதவீதம் குறையும் பட்சத்தில் வீட்டுக் கடனின் வட்டி விகிதம் 0.20 சதவீதம் மட்டுமே குறைகிறது என்று வங்கிகள் கூறுகின்றனர். இது உண்மையா.. இதன் பின்னணியில் இருப்பது என்ன என்பதைப் பார்ப்போம்.

ரெப்போரேட் குறைந்தாலும் வட்டி விகிதம் குறையவில்லை என்போருக்கான பதிலை, ஆண்ட்ரோமெடா சேல்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி ரவுல் கபூர் கூறியுள்ளார்.
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் கடன் வகையைப் பொருத்து மாறுபடும். முக்கியமாக இந்தியாவில் இரண்டு பொதுவான வரையறைகள் உள்ளன.
Marginal Cost of Funds Based Lending Rates (MLCR): MLCR என்பது மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட் அடிப்படையிலான லெண்டிங் ரேட் என்று கூறுவர். இது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் விகிதங்களை தீர்மானிக்க பயன்படுத்தும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட விகிதமாகும். இதன் அடிப்படையில் தான் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கடன்கள் ஆனாலும் சரி அல்லது புதிய கடன்கள் ஆனாலும் சரி, அதன் வட்டி விகிதங்கள் மாறுபடும். MLCR விகிதம் அதிகரிக்கும் போது கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கலாம். MLCR விகிதம் குறையும் போது கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையலாம்.
ரெப்போ லிங்க்ட் லோன் ரேட் (RLLR): RLLR அல்லது ரெப்போ லிங்க்டு லெண்டிங் ரேட் என்பது ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் பிணைக்கப்பட்ட அளவுகோலாகும். ரிசர்வ் வங்கியால் ரெப்போ விகிதத்தில் செய்யப்படும் எந்த மாற்றங்களும் உங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை பாதிக்கும்.
வீட்டுக் கடனுக்கான விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பொறுத்தவரை வங்கிகள், NBFCகள், ஹவுஸிங் பைனான்ஸ் (HFC) போன்ற நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்க வேண்டும். இந்த அடிப்படையான விதிகள் வங்கிகள் மற்றும் HFCகள் இரண்டிற்கும் பொருந்தும் என்றாலும், சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் விதிமுறைகள் NBFCகளுக்கு மட்டுமே பொருந்தும். கடன் வாங்குபவர்கள் இந்த விதிமுறைகளைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். மேலும் வீட்டுக் கடன் ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கடன் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
வங்கிகள் பொதுவாக ரிசர்வ் வங்கியின் விதிகளைக் கடைபிடித்து, ரெப்போ விகிதம் மாறும் போது கடன் விகிதங்களை மாற்றும். ஆனால் HFC நிறுவனங்களுக்கு பொதுவாக தங்கள் வட்டி விகிதங்களை முடிவு செய்ய அதிக சுதந்திரம் உள்ளது.
HFC நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கான கடன் விகிதங்களை நிர்ணயிக்கும் போது அவற்றின் செலவு, சந்தை நிலவரம் மற்றும் மற்ற போட்டி நிறுவனங்கள் தரும் வட்டி விகிதங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் விளைவாக கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் மாறுபடுகிறது.
நீங்கள் வீட்டு கடன் வாங்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் வட்டி விகிதங்களில் எவ்வாறு மாற்றங்களைத் தீர்மானிக்கின்றன மற்றும் தெரிவிக்கின்றன என்பதை புரிந்து கொள்ள அவர்களின் கடன் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக மதிப்பாய்வு செய்யுங்கள். வங்கியின் வட்டி விகித கொள்கையை பற்றி ஏதேனும் குழப்பம் இருந்தால், அவற்றை நேரடியாக அவர்களிடம் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications