திருச்சூரில் ஒரு சிறிய கடையில் ஆரம்பிக்கப்பட்டது தான் கல்யாண் ஜுவல்லர்ஸ். இன்று இந்தியா முழுவதிலும் தங்களுடைய கிளையை பரப்பி ஒரு மாபெரும் சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது. பல ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் முன்னணியில் இருந்த கல்யாண் ஜூவல்லர்ஸ் அக்ஷயா தங்க மாளிகை (ATM) என்ற புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளது.
அக்ஷயா தங்க மாளிகையின் முதல் ஷோரூமை, சென்னை தி-நகரின் பனகல் பார்க் அருகில் திறக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக 25,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான ஷோரூம் கட்டப்பட்டுள்ளது. அடுத்து வரும் 6 மாதங்களில் இன்னும் நான்கு ATM கடைகள் திறக்கப்படும் என்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கல்யாண் நிறுவனத்தின் மூன்றாவது முக்கிய பிராண்டாகும். இதற்கு முன்பு கல்யாண் மற்றும் கேண்டர் ஆகிய பிராண்டு ஷோரூம்கள் இயங்கி வருகின்றன. அதற்கு அடுத்தபடியாக இந்த ATM பிராண்ட் திறக்கப்படவுள்ளது. புதிய பிராண்டுக்காக இந்நிறுவனம் ரூ.300 கோடி வரை முதலீடு செய்துள்ளது.
ATM-மில் நகை வருமா?: கல்யாண் ஜுவல்லர்ஸ் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நடிகர் பிரபுவின் கம்பீரமான குரல் தான். அதோடு "நம்பிக்கை அதானே எல்லாம்" என்ற வசனமும் கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில் இடம் பெற்றிருக்கும். இப்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் கல்யாண் ஜூவல்லர்ஸ்க்காக ஒரு புதிய விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.
அந்த விளம்பரத்தில் ஒரு தம்பதியினர் நடந்து கொண்டே "எங்கே போய் நகை வாங்குவது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுக்கும் சிவகார்த்திகேயன் இனி ஏடிஎம்-லயே நகை வாங்கலாம் என்று கூறுகிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியில் அந்த பெண், ஏடிஎம்மில் பணம் வரும்.. எப்படி நகை வரும் என்று கேட்கிறார். அதற்கு சிவகார்த்திகேயன், ஆகஸ்ட் 21 வரைக்கும் வெயிட் பண்ணுங்க என்று கூறி எதிர்பார்ப்பை கிளப்புகிறார். இதோடு அந்த விளம்பரம் முடிகிறது. அக்ஷயா தங்க மாளிகை என்ற பிராண்டின் முதல் எழுத்தைக் கொண்டு ஏடிஎம் என்ற அப்ரிவேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்காகவே தனி பிராண்ட்: ஏடிஎம் பிராண்ட் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மக்களின் ரசனைக்கு ஏற்ப கொண்டுவரப்பட்டுள்ளது. செயின்கள், வளையல்கள், நெக்லஸ்கள் போன்ற ஒவ்வொரு நகையும் தமிழர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தனி பிராண்ட் தொடங்கப்பட்டதாக கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ரமேஷ் கல்யாணராமன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
