கர்நாடகாவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற மசோதாவை கொண்டு வர முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசு தீவிரம் காட்டி வருகிறது. எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அந்த முடிவை தற்போது நிறுத்தி வைத்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்திற்கு ஜூலை 15ஆம் தேதி கர்நாடக மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சட்டத்தின் படி தொழிற்சாலைகளிலும் பிற நிறுவனங்களிலும் நிர்வாக பதவிகளில் 50 சதவீத பணியிடங்களையும் மற்ற வேலைகளில் 70 சதவீத பணியிடங்களையும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களை கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும். அடுத்த வாரம் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில், இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட இருந்தது.

ஆனால் இதற்கு பல்வேறு பிரிவினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது அடுத்து முதலமைச்சர் சித்தராமையா சட்டத்தை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். கன்னட அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. தொழில்துறையினர் அரசியல் பிரிவினர் என அனைவரும் தங்களின் நிலைப்பாட்டை வெளியிட்டு வருகின்றனர்.
கர்நாடக மக்களை பொறுத்தவரை இந்த சட்டத்திற்கு ஆதரவான மனநிலையை கொண்டுள்ளனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. கர்நாடகாவில் வளர்ச்சி அடைந்த ஒரு பகுதியாக பெங்களூரு இருக்கிறது. இந்தியாவின் சிலிக்கான் வேலி, ஸ்டார்ட் அப் தலைநகரம், ஏஐ கேபிடல் என பல பெயர்களை கொண்டுள்ளது. ஆனால் பெங்களூருவை தவிர மற்ற பகுதிகள் பெருமளவில் வளர்ச்சி அடையவில்லை.
பெங்களூரு பகுதியில் சராசரியாக தனிநபர் வருமானம் 5.52 லட்சமாக இருக்கிறது. ஆனால் மற்ற மாவட்டங்களில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. தொழில் ரீதியாகவும் வேலைவாய்ப்பு ரீதியாகவும் கர்நாடகாவில் பெங்களூரு மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது, மற்ற பகுதிகளில் முன்னேற்றம் இல்லை. எனவே இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் வேலைவாய்ப்பு தேடி பெங்களூரு வருகின்றனர். ஆனால் பெங்களூருவில் இவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை, வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏற்கனவே அந்த வேலையை பெற்றுவிடுகின்றனர்.
இதன் காரணமாக தான் கர்நாடகா மக்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். வேறு மாநிலத்தவருக்கு வேலை கிடைக்கிறதே என நாங்கள் எதிராக நினைக்கவில்லை, மாறாக பெங்களூரு மாதிரியான ஒரு வெற்றிகரமான தொழில் நகரங்களை அரசும், நிர்வாகமும் உருவாக்கவில்லை என்பது தான் எங்களின் ஆத்திரம் என்கின்றனர். இதற்கு உதாரணமாக தமிழ்நாட்டை சுட்டிக்காட்டுகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஓசூர், கோவை, திருப்பூர் என பல தொழில்நகரங்கள் இருக்கும் போது கர்நாடகாவில் அப்படி ஒன்றை ஏன் உருவாக்கவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications