வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.. உங்கள் வீட்டின் உரிமையாளர் உங்களுக்கு 11 மாதத்திற்கு மட்டுமே வாடகை ஒப்பந்தம் போட்டிருப்பார். இதை ஆங்கிலத்தில் "ரெண்டல் அக்ரிமெண்ட்" என்று கூறுவார்கள். 1 வருடத்தில் 12 மாதங்கள் இருக்கும்போது ஏன் 11 மாதங்களுக்கு அக்ரிமெண்ட் போடப்படுகிறது என்பதற்கு பின்னால் சில சட்டப்பூர்வ காரணங்கள் உள்ளன. அதனால் தான் நாடு முழுவதும் இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் அவர்களுடைய வீடுகளை 11 மாதங்களுக்கு வாடகைக்கு விடுகின்றனர்.
சட்டப்பூர்வ காரணம்: இந்திய பதிவுச் சட்டம் 1908-இன் கீழ் ஒரு வீட்டு உரிமையாளர் 1 வருடத்திற்கும் குறைவாக அக்ரிமெண்ட் போட்டால் அதை சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இதனால் தேவையற்ற அலைச்சல் குறையும். அதோடு ஆவணத் தயாரிப்பு அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது. அதற்காகத்தான் வீட்டு உரிமையாளர்கள் 12 மாதங்களுக்கு பதிலாக 11 மாதங்களுக்கு அக்ரிமெண்ட் எழுதிக் கொடுக்கின்றனர்.
செலவு மிச்சம்: ஒரு வேலை 12 மாதங்கள் அல்லது அதற்கு மேலாக அக்ரிமெண்ட் போட்டால் கட்டாயம் அதை பதிவு செய்தாக வேண்டும். அதற்கு தனியாக ரெஜிஸ்ட்ரேஷன் ஃபீஸ், ஸ்டாம்ப் டியூட்டி செலுத்த வேண்டியிருக்கும். இதுபோல 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் போடும் பட்சத்தில் இந்த கூடுதல் செலவுகள் அனைத்தும் குறையும் அல்லவா?. இதுவும் இந்த 11 மாத அக்ரிமெண்ட் பாலிசி இருப்பதற்கு மற்றொரு காரணம்.

வீட்டு உரிமையாளருக்கு கிடைக்கும் நன்மைகள்: 11 மாத அக்ரிமெண்ட் இருப்பது உண்மையிலேயே வீட்டு உரிமையாளர்களுக்கு வசதியானதாக இருக்கிறது. ஒவ்வொரு 11 மாதங்களுக்கு ஒருமுறை வீட்டு உரிமையாளர்கள் தாங்கள் வீடு கட்ட செய்த செலவுக்கு ஏற்ப வாடகையை ஏற்றிக் கொள்ளலாம் அல்லது சில புதிய நிபந்தனைகளுடன் புது அக்ரீமெண்ட் போடலாம். அதுவே 2 வருடம், 3 வருடம் என அக்ரிமென்ட் போடும்போது அவர்களால் இடையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.
11 மாத அக்ரிமெண்ட் செல்லுபடியாகுமா?: பதிவு செய்யப்படாமல் இருக்கிறதே.. அப்படியானால் 11 மாத அக்ரிமெண்ட் உண்மையில் சட்டபூர்வமாக செல்லுபடியாகுமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் நோட்டரி சான்றளிக்கப்பட்ட 11 மாத வாடகை ஒப்பந்தம் சட்டபூர்வமாக செல்லுபடியாகக்கூடியது. உங்கள் வீட்டின் வாடகைதாரரிடம் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இதை நீங்கள் ஒரு சான்றாக சமர்ப்பிக்கலாம். ரெண்டல் அக்ரிமெண்ட் போடுவதற்கு 100 அல்லது 200 மதிப்புள்ள ஸ்டாம்ப் பேப்பர் பயன்படுத்தப்படுகிறது.
வருமான வரி தாக்கல் செய்வதற்கும் வாடகைதாரர்கள் பயன்படுத்தும் முக்கிய ஆவணங்களில் ரெண்டல் அக்ரிமெண்ட்டும் ஒன்று. வருமான வரி தாக்கல் செய்யும்போது வாடகை விவரங்களை வழங்குவதற்கும், வரி விலக்கு கோருவதற்கு ரெண்டல் அக்ரிமெண்ட்டைப் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications