இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வகை முதலீடுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
பொதுவாக எஸ்ஐபி முறையிலோ அல்லது ஒரே தடவை என்ற முறையிலோ நாம் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்கிறோம். இந்த நிலையில் நமக்கு ஒரு அவசர தேவை ஏற்படும் போது மியூச்சுவல் ஃபண்டினை கலைக்காமலேயே, அவசர தேவைக்கான பணத்தை பெற முடியும். அதற்கு பெயர் தான் மியூச்சுவல் ஃபண்டுகள் மீதான கடன்கள்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் அவற்றின் மீது கடன்களை பெற முடியும். இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் மீதான கடன் பெறுதல் என்பது அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
ஒரு அவசர தேவை ஏற்படுகின்ற பட்சத்தில் நாம் மியூச்சுவல் ஃபண்டுகளை பிணையமாக பயன்படுத்தி கடன் பெறலாம். எனவே நீங்கள் உங்கள் முதலீட்டை கலைக்க வேண்டியதில்லை. இந்த ஒரு அம்சம் தான் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் மீதான கடன்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது.
இதன் மூலம் நமது முதலீடும் இருக்கும், அது வளர்ந்து கொண்டே இருக்கும் . முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் மாற்றமே செய்யாமல் நிதி தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். எதிர்கால நிதி இலக்குகளையும் மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்பது மற்றொரு சிறப்பு.
மியூச்சுவல் ஃபண்டுகள் மீது நாம் கடன்கள் பெறும் போது அவற்றின் வட்டி விகிதமானது 9 -11 % வரை இருக்கிறது. நாம் வாங்கக்கூடிய தனிநபர் கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளில் நாம் வாங்கக்கூடிய கடன்களோடு ஒப்பிடுகையில் இந்த வட்டி விகிதமானது குறைவு. எனவே குறைந்த வட்டி விகிதம் காரணமாக மியூச்சுவல் ஃபண்டுகள் மீதான கடன் பெறுதல் அதிகரித்து வருகிறது.
வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் இது போல மியூச்சுவல் ஃபண்டுகள் மீதான கடன் வழங்கல் நடைமுறைகளை மிக எளிதாக்கியுள்ளன. அதுமட்டுமின்றி விரைவாகே கடன் தொகையும் கிடைத்து வருகிறது.
கடன் வாங்குபவரின் வசதியை அதிகரிக்கும் வகையில் முன்கூட்டியே கடனை செலுத்துவதற்கான கட்டணம் மற்றும் அபராதங்களை நிதி நிறுவனங்கள் தள்ளுபடி செய்கின்றன. கூடுதலாக கடனை திரும்ப செலுத்துவதற்கான கடுமையான அட்டவணைகள் எதுவும் கிடையாது. அதாவது கடன் பெற்றவர்கள், திரும்ப செலுத்தும் காலத்தை தன்னுடைய நிலைக்கு ஏற்ப முடிவு செய்யும் நெகிழ்வு தன்மை உள்ளது.
கடன் வாங்குபவர்கள் , முதலீட்டை பணமாக்காமல் கடன்களை பெற அனுமதிக்கப்படுவதால், பணமாக்குவதன் மூலம் போடப்படும் எந்த ஒரு மூலதன ஆதாய வரிகளும் இதில் செலுத்த வேண்டியதில்லை. மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு கடன் வழங்குவது கடன் வாங்குபவர்களுக்கு குறைந்த வரி பொறுப்பு, குறைந்த வட்டி விகிதம், நெகிழ்வான திருப்பி செலுத்துதல் மற்றும் விரைவான ஒப்புதல்கள் ஆகிய வசதிகளை வழங்குகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications