2024 - 25 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் நிகர அந்நிய நேரடி முதலீடு (Net foreign direct investment) 96 சதவீதத்திற்கும் மேல் குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி 2024- 25 ஆம் ஆண்டில் இந்தியாவின் நிகர அந்நிய நேரடி முதலீடு 96 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்து வெறும் 353 மில்லியன் டாலர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.
பொதுவாக நிகர அந்நிய நேரடி முதலீடு என்பது இந்தியாவிற்குள் வரும் நேரடி அந்நிய முதலீடு (Gross foreign direct investment) மற்றும் இந்தியாவில் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் இங்கிருந்து வெளியே அனுப்பக்கூடிய பணம் மற்றும் முதலீடு ஆகிய இரண்டுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை கழித்து வரக்கூடிய தொகை. அந்த வகையில் இந்தியாவில் மொத்த அந்நிய நேரடி முதலீடு தொடர்ந்து வலுவாகவே இருக்கிறது. ஆனால் நிகர அந்நிய நேரடி முதலீடு வெகுவாக குறைந்திருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் தொழில் புரியக்கூடிய வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு அதிக பணத்தை திருப்பி அனுப்பி இருக்கின்றன. அதேபோல இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிக அளவு முதலீடு செய்திருக்கின்றன. 2020-21 ஆம் ஆண்டில் நிகர அந்நிய நேரடி முதலீடு 44 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு 28 பில்லியன் டாலர்களாக இருந்து 2024-25ஆம் நிதியாண்டில் 353 மில்லியன் டாலர்கள் என குறைந்துவிட்டது.
ஆனால் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீடு தொடர்ந்து வளர்ச்சியில் தான் இருக்கிறது. 2022 -23 ஆம் ஆண்டில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு 71.4 பில்லியன் டாலர்கள் , இது 2023-24ஆம் ஆண்டில் 71.3 பில்லியன் டாலர்களாக இருந்தது, 2024-25ஆம் ஆண்டில் 81 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. உற்பத்தி, நிதி சேவை ,மின்சாரம் மற்றும் எரிசக்தி, தகவல் தொடர்பு துறைகளில் தான் அதிகமாக அந்நிய முதலீடு வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கு மேல் இந்த பிரிவுகளில் எல்லாம் நேரடி முதலீடுகள் அதிகரித்திருக்கின்றன என ஆர்பிஐ குறிப்பிடுகிறது.
சிங்கப்பூர், மொரிசியஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தான் 75 சதவீதத்திற்கும் அதிகமான முதலீடுகள் இந்தியாவை வந்தடைந்து இருக்கின்றன. 2024 -25 ஆம் நிதியாண்டில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்ற நாடுகளில் 29.2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கின்றன இது முந்தைய ஆண்டை விட 75% அதிகமாகும்.
இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் சிங்கப்பூர், அமெரிக்கா, மொரிசியஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தான் அதிக அளவு முதலீடு செய்திருக்கின்றன. இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும் வங்கி சேவைகள் மற்றும் காப்பீட்டு துறை, உற்பத்தி, சில்லறை வர்த்தகம், உணவகங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் தான் அதிக அளவு முதலீடு செய்திருக்கின்றன என்பது ரிசர்வ் வங்கியின் தகவல் மூலம் வெளியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications