சென்னை: இந்தியாவில் தற்போது ரியல் எஸ்டேட் துறை நல்ல லாபம் தரக்கூடிய மற்றும் வேகமாக வளர்ச்சி அடையக் கூடிய துறையாக மாறி இருக்கிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டை குவிக்கின்றனர். இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன அவற்றை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய ரூபாய் மதிப்பு: வெளிநாட்டு கரன்சிகளுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவது இந்திய ரியல் எஸ்டேட்டில் என்ஆர்ஐ-கள் முதலீடு செய்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுன்ட், யூரோ போன்ற வலுவான நாணயங்களில் வருமானம் ஈட்டுபவர்கள் எளிதாக ரூபாயை பயன்படுத்தி இங்கே ஒரு சொத்தை வாங்க முடிகிறது. எனவே தான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்கின்றனர்.

வெளிப்படைத்தன்மை: மத்திய அரசு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம், பினாமி பரிவர்த்தனைகள் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி என கொண்டு வந்திருக்கும் சீர்திருத்தங்கள் ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படை தன்மையை அதிகரித்துள்ளன. இதனால் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் முன்பை விட நம்பிக்கையோடு இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு செய்கின்றார்களாம். இதன் மூலம் தாங்கள் ஏமாற்றப்படுவதும் தங்கள் மீதான மோசடிகளும் குறைந்து இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.
பொருளாதார வளர்ச்சி: உலகளவில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு பொருளாதாரமாக இருக்கிறது. எனவே நிச்சயம் இந்தியாவில் உள்கட்டமைப்பு , உற்பத்தி, ஐடி ஆகிய துறைகள் வளர்ச்சியில் தான் இருக்கும். எனவே பயமின்றி முதலீடு செய்யலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாம்.
பெருநகரங்கள் : இந்தியாவில் மும்பை, பெங்களூரு ,ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்கள் ரியல் எஸ்டேட் ஹாட்ஸ்பாட்டுகளாக மாறியுள்ளன. இந்த நகரங்களில் செய்யப்படும் முதலீடுகள் நல்ல வருமானத்தை தருகின்றன என்பதால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த நகரங்களில் நீண்ட கால நோக்கில் லாபம் தரக்கூடியதாக கருதி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர்.
உணர்வு ரீதியான பிணைப்பு: என்னதான் இந்தியாவை விட்டு வெளிநாட்டில் தங்கி இருந்து வேலை பார்த்தாலும் தாய்நாட்டுடன் ஒரு பிணைப்பு வேண்டும் என்பதற்காகவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் தங்களுடைய எதிர்கால ஓய்வு திட்டம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இங்கே முதலீடு செய்கின்றனர். இது ஒரு கலாச்சார மற்றும் உணர்ச்சி பூர்வமான காரணமாக பார்க்கப்படுகிறது .
பன்முகத்தன்மை கொண்ட முதலீடு: தங்களுடைய முதலீட்டு போர்ட்போலியோவை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்ற விரும்புவோர், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதோடு மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்கின்றனர்.
வரி சலுகை: இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ-களுக்கு பல்வேறு வரி சலுகைகள் கிடைக்கின்றன. குறிப்பாக பிரிவு 80சி மற்றும் 24 ஆகியவற்றின் கீழ் வீட்டு கடனுக்கு செலுத்தும் வட்டி தொகை மற்றும் அசல் தொகையில் வரி விலக்கு கிடைக்கிறது.
கமர்ஷியல் ரியல் எஸ்டேட் : இந்தியாவில் தற்போது அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதேபோல சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் கிடங்குகளுக்கான தேவை அதிகரித்திருப்பதால் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இது தங்களுக்கு ஒரு சிறந்த முதலீடு வாய்ப்பாக கருதி கமர்ஷியல் சார்ந்த ரியல் எஸ்டேட் பிரிவில் அதிக முதலீடை மேற்கொள்கிறார்கள்.
வெளிநாடு வாழ் இந்தியர்களை பொறுத்தவரை இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதலீடு என்பது தன்னுடைய ஓய்வுக்கான தேவை அல்லது தங்களுடைய குழந்தைகளுக்காக மேற்கொள்கின்றனர். மேலும் தாய் நாட்டுடன் ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு, நீண்ட கால அடிப்படையில் நல்ல வருமானம் தரக்கூடியது ஆகியவற்றின் அடிப்படையிலும் இந்த முடிவை எடுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications