சென்னை: டோர் ஸ்டெப் டெலிவரி எனப்படும் வீடு தேடி வந்து பொருட்களை டெலிவரி செய்யும் தொழில் இந்தியாவில் நல்ல டிமாண்டில் இருக்கிறது. இதற்கு காரணம் மக்கள் சௌகரியத்திற்கு பழகிவிட்டது தான்.
இதனால் தான் ஸோமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளன.

முதலில் உணவுப் பொருட்கள் டெலிவரி என தொடங்கி, தற்போது மளிகை பொருட்கள், பால் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான பொருட்களை கூட நாம் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம், அந்த பொருட்கள் நம் வீடு தேடி வந்துவிடும்.
இவ்வாறு ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்து வாங்குவதற்கும், நேரடியாக சென்று கடையில் அதே பொருளை வாங்குவதற்கும் விலையில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறி உள்ளது.
சென்னையை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் அண்மையில் தான் ஸ்விக்கியில் ஆர்டர் செய்த பொருட்களையும் அதே பொருளை தான் கடையில் வாங்கினால் எவ்வளவு ஆகும் என்பதையும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
பிரியங்கா திருமூர்த்தி என்ற சென்னையை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் காபி சாஸ்திரா கடையில் நேரடியாக சென்று பின் பட்டர் ஜாம் வாங்குவதற்கும், ஸ்விக்கில் ஆர்டர் செய்து வாங்குவதற்கும் இடையிலான விலை வித்தியாசத்தை ஒப்பிட்டுள்ளார்.
இதன்படி அந்த குறிப்பிட்ட கடையில் நேரில் சென்று பன் பட்டர் ஜாம் வாங்கும் போது ஒன்றின் விலை 45 ரூபாய் தான். ஆனால் அதையே ஸ்விக்கி செயலி மூலமாக ஆர்டர் செய்யும் போது ஒரு பன் பட்டர் ஜாமின் விலை 115 ரூபாய்.
இதனை ஒப்பிட்டு பதிவிட்டுள்ள பிரியங்கா திருமூர்த்தி நமது சௌகரியத்துக்கான விலை இது என சுட்டிக்காட்டியுள்ளார். பொதுவாக நாம் இதுபோல ஸ்விக்கி உள்ளிட்ட தளங்களில் உணவுப்பொருட்கள் அல்லது மளிகை சாமான்களை ஆர்டர் செய்யும் போது, டெலிவரி தொகை மட்டும் இல்லாமல் கன்ஃவீனியன்ஸ் ஃபீஸ் மற்றும் பிளாட்பார்ம் ஃபீஸ் மற்றும் என பல்வேறு மறைமுக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
மணி கண்ட்ரோல் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் நாம் உணவகங்களில் இருந்து உணவுப் பொருட்களை ஆர்டர் செய்யும் போது ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் 24% முதல் 28% வரை கமிஷனாக பெற்றுக் கொள்கின்றன.
இது தவிர டெலிவரி கட்டணம் தனியாக போடப்படுகிறது. ஒரு வேளை மழை பெய்தால் அதற்கென ஒரு தனி கட்டணம் என பல்வேறு மறைமுக கட்டணங்களை இந்த செயலிகள் விதிக்கின்றன.
பிரியாங்காவின் இந்த பதிவின் கீழ் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ஒரு பயனர் இதில் மோசமானது என்னவென்றால் இப்படி பல கட்டணங்களை நம்மிடம் இருந்து பெரும் நிறுவனங்கள் இதனை டெலிவரி செய்யக்கூடிய நபர்களுக்கு சொற்பமான தொகையை ஊதியமாக வழங்குகின்றன எனக் கூறியுள்ளார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications