பத்திரப்பதிவுகளின் போது முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதை தடுப்பதற்காகவே பத்திரப்பதிவு அலுவலகங்களில் தாய் பத்திரம் கட்டாயமாக கேட்கப்படுவதாக அமைச்சர் மூர்த்தி சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின் போது அதிமுக எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி பதிலளித்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில் வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அதிமுக எம்எல்ஏ சங்ககிரி சுந்தரராஜன் மூலப்பத்திரங்கள் காணாமல் போகின்ற பட்சத்தில் , பத்திரப்பதிவின் போது மூலப்பத்திரம் இல்லை என்றால் நகல் பத்திரத்தை வைத்து பத்திரப்பதிவு செய்யலாம் என நீதிமன்ற உத்தரவு கொடுத்திருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசும் ஆணை பிறப்பித்துள்ளது என குறிப்பிட்டார்.

இப்படி நீதிமன்ற உத்தரவு அமலில் இருந்தாலும் சார்பதிவாளர் அலுவலகங்களில் மூலப் பத்திரங்கள் இல்லாமல் பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதில்லை அது ஏன் என்ற கேள்வியை முன் வைத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மூர்த்தி மூலப்பத்திரம் இல்லாமல் உங்கள் பத்திரத்தை பதிவு செய்து கொள்ளலாமா? என்ற கேள்வியை முன்வைத்தார்.
அதாவது மூல பத்திரம் இல்லாதவர்கள் அவற்றின் நகல் பத்திரத்தை வைக்க வேண்டும் என்றால் காவல் நிலையத்தில் என்னுடைய மூலப்பத்திரம் காணாமல் போய்விட்டது என்று புகார் அளித்து அதற்கான ஒரு சான்றிதழை வாங்க வேண்டும். தற்போது பல்வேறு இடங்களிலும் இவ்வாறு சான்றிதழ்கள் வாங்கி பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அதன் மூலம் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
இந்த சான்றிதழ்கள் வெவ்வேறு இடங்களில் வாங்கப்படுகிறது என்பதால் தற்போது கொடுப்பதில்லை என்றும் நீதிமன்றத்திற்கு சென்று தான் உத்தரவு பெற வேண்டும் என்றும் பேசினார். மூலப்பத்திரம் இல்லாமல் சொத்துக்களை பதிவு செய்தால் அதனுடைய விளைவுகள் என்ன என்பது தெரியும் , எத்தனை பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், எத்தனை பேர் சொத்தை இழந்து இருக்கிறார்கள் என்பதை நீங்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
எனவே பத்திரப்பதிவில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் உரிமையாளர்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பத்திர பதிவு துறை அலுவலகங்களில் மூலப்பத்திரம் அல்லது தாயப்பத்திரம் கட்டாயமாக கேட்கப்படுகிறது என்ற விளக்கத்தை அளித்தார்.


Click it and Unblock the Notifications