உலக அளவில் சக்தி வாய்ந்த தலைவர்களின் பட்டியலில் இருப்பவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் . இவர் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறாரோ அந்த அளவிற்கு அவரின் உயிருக்கும் ஆபத்து அதிகமாக தான் இருக்கிறது . அதனால் புதின் தன்னை பாதுகாத்து கொள்வதற்கான ஏற்பாடுகளில் எப்பொழுதுமே கவனமாக இருப்பார்.
புதினை சுற்றி ஒரு பாதுகாப்பு அரண் எப்பொழுதுமே இருக்கும். இல்லை என்றால் மேற்கத்திய நாடுகளுக்கு எல்லாம் ஆட்டம் காட்ட முடியுமா. அவருடைய பாதுகாப்புக்காக செய்யப்பட்டு இருக்கக்கூடிய ஏற்பாடுகளை படித்தால் நமக்கு எல்லாம் தலையே சுற்றி விடும். ரஷ்ய அதிபர் புதினின் பாதுகாப்புக்காக தனிப்பட்ட ஒரு பாதுகாப்பு அமைப்பே இருக்கிறது. இந்த தனிப்பட்ட காப்பாளர்கள் இதற்காக பிரத்தியேகப் பயிற்சியை பெற்றவர்கள் .

குறிப்பிட்ட வயது குறிப்பிட்ட உயரம், பல மொழிகளை பேச தெரிய வேண்டும், திடமான உடல் வாகு மட்டுமல்ல திடமான மனதும் கொண்டவராக இருந்தால் தான் புதினின் பாதுகாப்பு படையில் சேரவே முடியும். புதின் வெளிநாடுகளுக்கு செல்கிறார் என்றால் சில மாதங்களுக்கு முன்பே அவருடைய பாதுகாப்பு குழுவினர் குறிப்பிட்ட அந்த நாட்டிற்கு சென்று அங்கே அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆய்வு செய்வார்கள்.
பல்வேறு நாடுகளிலும் புதினின் உயிருக்கு ஆபத்துகள் இருப்பதால் உணவில் யாரேனும் விஷம் அல்லது ஸ்லோ பாய்சன் உள்ளிட்டவற்றை கலந்து விடக்கூடாது என்பதில் அவர் பாதுகாப்பு படை மிகவும் கவனமாக இருக்கும். எனவே புதின் எப்போது வெளிநாடு சென்றாலும் தனக்கான சமையல் கலைஞர்களையும் உடன் அழைத்துச் சென்று விடுவார். அவர் தங்கி இருக்கும் வெளிநாட்டு ஹோட்டல்களில் வழங்கக்கூடிய உணவை அவர் உண்ண மாட்டார் .
அதிபருக்கென பிரத்தியேகமாக வந்த சமையல் காரர்கள் தான் அவருக்கான உணவை தயார் செய்வார்கள். உணவில் விஷம் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஏதேனும் கலக்கப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்காகவே ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் நடமாடும் உணவு சோதனை ஆய்வகங்களை உடன் கொண்டு செல்வார்கள் . அனைத்து உணவுகளும் இதில் பரிசோதிக்கப்பட்ட பிறகே புதினுக்கு வழங்கப்படும்.

புதினின் உடல் கழிவுகளை கூட வெளிநாட்டில் அவர்கள் விட மாட்டார்கள் . அதாவது ஒருவருடைய சிறுநீர் மற்றும் கழிவுகள் மூலம் அவருடைய உடலில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது அவருடைய உடல்நலம் எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். எனவே புதினின் சிறுநீர், கழிவுகளை கூட தனியாக ஒரு பெட்டியில் சேகரித்து ரஷ்யாவிற்கு கொண்டு சென்று விடுவார்கள் .
எனவே புதின் வரும்போது எல்லாம் அவருடன் ஒரு பூப் சூட்கேஸ் எனப்படும் கழிவுகளை கொண்டு செல்வதற்கான தனிப்பெட்டியும் அவற்றை கொண்டு செல்வதற்கு தனி வேலை ஆட்களும் உடன் வருகிறார்கள். இதன் மூலம் புதினின் உடல்நிலை குறித்த எந்த ஒரு ரகசிய தகவல்களும் வெளிநாடுகளுக்கு கசிவது என்பது தவிர்க்கப்படுகிறது.
இது தவிர புதின் எந்தெந்த இடங்களுக்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் முன்பே ரஷ்ய பாதுகாப்பு படையினர் முழுமையாக சோதனையை நடத்தி இந்த இடம் பாதுகாப்பானது தான் என அறிவிப்பு கொடுப்பார்கள். புதின் உடன் எப்போதும் பாடிடபுள் எனப்படும் அவரை போலவே தோற்றம் கொண்ட நபர்கள் வருவார்கள் என சொல்லப்படுகிறது. உயிருக்கு ஆபத்துள்ள இடங்களில் புதின் தனக்கு மாறாக பாடி டபுள்களை தான் அனுப்புவாராம் .


Click it and Unblock the Notifications