டெல்லி: 2016 ஆம் ஆண்டு வரை மத்திய பட்ஜெட் என்றாலே இரண்டு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் ஆகும். ஒன்று ரயில்வே பட்ஜெட், ரயில்வே துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், அதனைத் தொடர்ந்து மற்ற துறைகளுக்கு சேர்த்து மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகும்.
ஆனால் 2016ஆம் ஆண்டு மத்திய அரசு ரயில்வே பட்ஜெட்டை மத்திய பட்ஜெட்டோடு இணைப்பது என முடிவெடுத்தது இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டிலிருந்து மத்திய பட்ஜெட் உடன் சேர்த்தே ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

1924 ஆம் ஆண்டில் அக்குவோர்த் குழுவின் பரிந்துரைகளை ஏற்று ரயில்வே பட்ஜெட் என்பது பொது பட்ஜெட்டில் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே துறை மிகப்பெரிய நெட்வொர்க் என்பதால் தனியாக பட்ஜெட் போடுவது சரியானதாக இருந்தது.
சுதந்திரத்திற்கு பிறகும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. 2016 ஆம் ஆண்டு வரை ரயில்வே பட்ஜெட் தனியாகவும் மத்திய பட்ஜெட் தனியாகவும் தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் தான் 2017 ஆம் ஆண்டில் மத்திய அரசு ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்தது.
2016ஆம் ஆண்டில் மத்திய அரசு ரயில்வே பட்ஜெட்டை ஒன்றிணைக்க முடிவு செய்ததாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது. அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2017 ஆம் ஆண்டில் முதல்முறையாக மத்திய பட்ஜெட் உடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். நிதி ஆயோக் குழுவினர் அளித்த பரிந்துரைகள் தான் இந்த இரண்டு பட்ஜெட்டுகளின் இணைப்புக்கு காரணம்.
நிதி ஆயோக் தலைவர்கள் விவேக் மற்றும் கிஷோர் தேசாய் ஆகியோரால் எழுதப்பட்ட ரயில்வே பட்ஜெட்டை ஒழிப்பது என்ற தலைப்பிடப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் தான் இந்த இணைப்பானது மேற்கொள்ளப்பட்டது. ரயில்வே அமைச்சகம் ஒரு துறை ரீதியாக இயங்கும் வணிக நிறுவனமாக தொடர்ந்து செயல்படும் அதே நேரத்தில் ஒன்றிய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு தனி மதிப்பீடுகள் மற்றும் மானிய கோரிக்கைகள் இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.
ரயில்வே பட்ஜெட்டை மத்திய பட்ஜெட் உடன் ஒருங்கிணைப்பதற்கான முடிவு என்பது ரயில்வே கொள்கைகளை பரந்த பொருளாதார உத்திகளுடன் இணைப்பதை நோக்கமாக கொண்டது என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் ரயில்வே பட்ஜெட் என்பது முழுக்க முழுக்க பொதுமக்களுக்கு ஆதரவான அணுகுமுறைகளை கொண்டிருந்தது.
கட்டணங்கள் குறைப்பது, புதிய புதிய திட்டங்களை அறிவிப்பது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தது. எனவே தேசிய பொருளாதார ஓட்டத்துடன் ரயில்வே நிதியையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு கருத்தாக்கத்தில் தான் இப்படி ஒரு முடிவு கொண்டு வரப்பட்டது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications