இந்திய அஞ்சல் துறை வழங்கி வந்த பழமையான சேவைகளில் ஒன்றான பதிவு தபால் (Registered Post), வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஸ்பீட் போஸ்ட் சேவையுடன் ஒன்றிணைக்கப்படுகிறது. இந்தத் தகவலை அஞ்சல் துறை அறிவித்துள்ளது. ஜூலை 2ஆம் தேதி வெளியான இந்த சுற்றறிக்கையில், இந்த மாற்றம் ஏன் கொண்டு வரப்படுகிறது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதிரியான சேவைகள் இரண்டாக இல்லாமல், அவற்றை ஒன்றாக இணைத்து வாடிக்கையாளர்கள் சிக்கல் இல்லாமல் சுலபமாக பயன்பெறும் வகையில், இந்த மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு தபால் (Registered Post) என்பது பொதுவாக பாதுகாப்பான தபால் சேவையாக கருதப்படுகிறது. இது, குறிப்பிட்ட நபருக்கே மட்டும் தபாலை வழங்குவதால், பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. ஸ்பீட் போஸ்ட் (Speed Post) சேவை என்பது வேகமாக அனுப்பும் சேவையாகும். ஆனால் இது, குறிப்பிட்ட முகவரிக்கே அனுப்பப்படும் சேவை என்பதால், அந்த முகவரியில் உள்ளவர்கள் மட்டுமே தபாலை பெற முடியும். பதிவு தபால் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது மற்றும் ஸ்பீட் போஸ்டுடன் ஒப்பிடும்போது செலவினத்தில் சிக்கனமாக இருக்கிறது.
இதற்கிடையே, கடந்த 2011-12ஆம் ஆண்டிலிருந்து, பதிவு தபால் சேவையின் பயன்பாடு ஆண்டுதோறும் குறைந்து வந்ததாக இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் 244.4 மில்லியன் (24 கோடி) பதிவு தபால் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், 2019-20 ஆம் ஆண்டில் இது 184.6 மில்லியனாக (18 கோடி) குறைந்துள்ளது.
இதன் மூலம், கொரோனா தொற்று ஆரம்பிக்கும் முன்பே சுமார் 25% வீழ்ச்சி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொரோனா காலத்தில் விரைவாக வளர்ந்த டிஜிட்டல் மாற்றங்களும் பதிவு தபாலின் தேவை குறைவதற்கான முக்கிய காரணமாக இருந்துள்ளன.
இந்நிலையில், பதிவு தபால் சேவை மூடப்பட போவதாக தவறான தகவல் பரவி வரும் நிலையில், அதற்கு இந்திய அஞ்சல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, பதிவு தபாலை மூடவில்லை என்றும் இனி ஸ்பீட் போஸ்ட் சேவைக்குள் ஒரு 'ரெஜிஸ்ட்ரேஷன் வசதியாக கிடைக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ரூ.2.50 செலவுள்ள இன்லேண்டு கார்டை பதிவு தபாலாக அனுப்ப விரும்பினால் ரூ.17 கூடுதலாக செலுத்த வேண்டும். அதேபோல், ரூ.5 மதிப்புள்ள ஒரு கடிதம் பதிவு செய்தால் ரூ.22 ஆகும். இந்த பதிவு வசதி இனிமேல் ஸ்பீட் போஸ்ட் சேவையின் கீழ் கிடைக்கும். இது 1986ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த சேவையாகும். இந்த முயற்சியின் நோக்கம், அஞ்சல் சேவையை ஒருங்கிணைத்து, செயல்திறனை மேம்படுத்தி, தெளிவான கண்காணிப்பு மற்றும் வாடிக்கையாளர் வசதியை உயர்த்துவதாகும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications