பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்கம், வெறும் பதவி உயர்வு மட்டும் தந்துவிட்டு சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பது என ஊழியர்களுக்கு சவாலான சூழல்களை தந்துள்ளன.
நடப்பாண்டில் ஐடி நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை கூட குறைத்துவிட்டன. இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒரு புறம் நம் வேலைகளுக்கு போட்டியாக உருவாகி கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் ஒரு வேலைக்கு மட்டும் டிமாண்ட் அதிகமாக இருப்பதோடு, சம்பளமும் கை நிறைய கிடைக்கிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் இந்திய கிளைகளை தலைமை ஏற்று நடத்துவதற்கு ஆட்களை தேர்வு செய்து சம்பளத்தையும் வாரி வழங்குகின்றன. global capability centres அதாவது வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய கிளைகள் இவை சுருக்கமாக ஜிசிசி என அழைக்கப்படுகின்றன.
இப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் ஜிசிசி மையங்களை தலைமை தாங்குவோருக்கு 3 முதல் 6 கோடி வரை ஆண்டு சம்பளம வழங்கப்படுகிறது. இது தொடர்பாக நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் வெளி வந்துள்ள தகவலின் படி இந்தியாவில் 16-18% ஜிசிசி-க்கள் தலைமை பதவிகளில் இருப்பவருக்கு 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்குகின்றன.
சில பெரிய ஜிசிசி-க்கள் 8.3 கோடி ரூபாய் வரை ஊதியம் வழங்குகின்றன என Xpheno ஆய்வு நிறுவனத்தின் தலைமை அதிகாரி சித்தார்த் வர்மா கூறியுள்ளார்.
வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரம், இந்தியாவில் வளர்ந்து வரும் வாய்ப்புகள், மனித வளம் ஆகியவை காரணமாக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் தங்களின் நிலையை வலுப்படுத்துவதில் தீவிரமாக உள்ளன.
எனவே இந்தியாவில் தலைமை பொறுப்புக்கு சரியான நபர்களை நியமிக்க எவ்வளவு ஊதியத்தையும் வழங்க தயாராக இருக்கின்றன. குறிப்பாக வங்கி மற்றும் நிதித்துறைகளில் இந்த பதவிகளில் 20,000 பேர் இருக்கின்றனர்.
வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய பிரிவுக்கு தலைமை பொறுப்பு வகிப்பது என்பது தற்போது பெரும் பொறுப்புகள் நிறைந்த பணியாக மாறிவிட்டது என Heidrick & Struggles நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் புனீத் பிரதாப் சிங் கூறுகிறார்.
உள்நாட்டில் தொழிலை மேம்படுத்துவது மட்டுமின்றி சர்வதேச தரம் மற்றும் கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் அளவிலான பொறுப்புகளையும் கையாள வேண்டி இருக்கிறது என தெரிவிக்கிறார். நிறுவனத்தின் கொள்கைகளுக்கு ஏற்பவும் உள்நாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டும் நிறுவனத்தை நடத்த வேண்டியது மற்றொரு சவால் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த பதவிகளுக்கான ஊதியம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது, வரும் காலங்களிலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications