சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கியுள்ள இந்த பயணம் செப்டம்பர் 14ஆம் தேதி முடிவடைகிறது. முன்னதாக தன்னுடைய பயணம் தொடங்குவதற்கு முன் திமுக கட்சி தொண்டர்களுக்கு தன்னுடைய பயணம் குறித்து முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் தொழில்துறையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு தான் அமெரிக்காவுக்கு பயணம் செய்வதாக கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடனே தன்னுடைய பயணம் அமைந்திருக்கிறது எனக் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் பல்வேறு நிறுவன தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்துகிறார். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு கணிசமான முதலீடுகள் வந்து சேரும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள தமிழ் சமூக மக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் ஸ்டாலின் உரையாற்ற இருக்கிறார். பின்னர் அங்கிருந்து சிகாகோவுக்கு புறப்படும் அவர் செப்டம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க இருக்கிறார்.
அமெரிக்காவில் தான் தங்கி இருக்கும் அனைத்து நாட்களும் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகளுடன் தான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி அமெரிக்காவை சேர்ந்த தமிழ் சமூக மக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாட இருக்கிறார். மு.க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த முறை அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார்.
ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்த பயண நாட்களின் நோக்கம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கு பயன் தருவதாக இருக்க வேண்டும் என்பதுதான் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குறுகிய இடைவெளியில் தமிழ்நாடு அரசு நிர்வாக பணிகள் தொய்வின்றி தொடரவும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திடவும் அமைச்சர்களும் அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்படுவார்கள் என அவர் கூறியுள்ளார் . தான் வெளிநாட்டுக்கு சென்று இருந்தாலும் தமிழ்நாட்டில் எந்த ஒரு பணியும் தடைபடாமல் நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications