ஜூன் 4ம் தேதி முடிந்த வாரத்தில் இந்தியாவில் சுமார் 6.8 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய முதலீடு குவிந்தது. இதன் மூலம் நாட்டின் மொத்த அன்னிய செலாவணி அளவீடு 605 பில்லியன் டாலர் அளவிலான உயர்வை அடைந்தது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக அன்னிய செலாவணி 600 பில்லியன் டாலர் அளவீட்டைத் தாண்டி புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கி இந்த நிலையைக் கண்டு பெருமைப்படவோ, மகிழ்ச்சி அடையவோ இல்லை.. என்ன காரணம் தெரியுமா..?!
இந்தியாவின் அன்னிய செலாவணி
இந்தியாவின் அன்னிய செலாவணி அளவீடு முதல் முறையாக 605.008 டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளதை பெரியதாக ரிசர்வ் வங்கி கொண்டாடவில்லை, இதற்கான காரணத்தை ரிசர்வ் வங்கியின் கவர்னர் மைகேல் பத்ரா தலைமையிலான ஆர்பிஐ ஆராய்ச்சி பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது அன்னிய செலாவணி அளவீடு 15 மாத இறக்குமதி மட்டுமே போதுமானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
5வது இடத்தில் இந்தியா
உலகிலேயே அதிக அன்னிய செலாவணி வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா இருந்தாலும், வெறும் 15 மாத இறக்குமதி தொகை என்பது மிகவும் மோசமான அளவீடு. அதுவும் 2021-22 நிதியாண்டின் நாட்டின் இறக்குமதி அளவீடுகள் மிகவும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனா முதல் ஜப்பான் வரை
சீனா 3.22 டிரில்லியன் டாலர் அளவிலான அன்னிய செலாவணி கொண்டு 16 மாத இறக்குமதிக்கும், சுவிஸ் 1.07 டிரில்லியன் டாலர் உடன் 39 மாத இறக்குமதிக்கும், ஜப்பான் 1.38 டிரில்லியன் டாலர் உடன் 22 மாத இறக்குமதிக்கும், ரஷ்யா 604.8 பில்லியன் டாலர் உடன் 20 மாத இறக்குமதிக்குமான தொகையை வைத்துள்ளது. டாப் 5 நாடுகளில் இந்தியா தான் மிகவும் குறைவு, இதேபோல் பிற நாடுகளை விடவும் இந்தியாவின் ஏற்றுமதி அளவு குறைவு.
-12% GDP அளவு கடன்
இவை அனைத்திற்கும் மேலாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ள முக்கியமான விஷயம் இதுதான்.. இந்தியா வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய மொத்த தொகை நாட்டின் மொத்த சொத்து மதிப்பை விடவும் 12 சதவீதம் அதிகமாக உள்ளது, அதாவது -12% GDP அளவு.
டிசம்பர் 2020 அளவீடு
இதுமட்டும் அல்லாமல் டிசம்பர் 2020ல் நாட்டின் கடன் அளவு 563.5 பில்லியன் டாலராக இருக்கும் வேளையில் அன்னிய செலாவணி 585.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு
இந்தியாவின் அன்னிய செலாவணி அதிகமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் மே மாதத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 2 சதவீதம் அதிகரித்தது. இதோடு மே மாதத்தில் ஆசியாவிலேயே மிகவும் சிறப்பான நாணயமாக இந்திய ரூபாய் விளங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications