பிரேசில்: பிரேசிலில் எலான் மாஸ்கின் எக்ஸ் தளம் தடை செய்யப்பட்டது குறித்து தான் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே எலான் மஸ்கிற்கும் பிரேசிலின் நீதித்துறைக்கும் இடையே பேச்சு சுதந்திரம் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் பிரேசில் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலெக்சாண்டர் டி மோரஸ் அந்நாட்டில் எக்ஸ் வலைதளத்திற்கு தடை விதித்துள்ளார்.
பிரேசிலில் முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய வன்முறைகள் பெரிய சேதங்களை ஏற்படுத்தின. இதனை அடுத்து வன்முறையை தூண்டும் வகையிலும் போலியான தகவல்களை பரப்பும் வகையிலும் செயல்பட்ட எக்ஸ் கணக்குகளை முடக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம் இந்த உத்தரவை பின்பற்றவில்லை. இதற்கு மாறாக செயல்பட்ட எலான் மஸ்க், இதுபோல கணக்குகளை முடக்குவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால் பிரேசில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி மோரஸுக்கும் எலான் மஸ்க்கும் இடையிலான வார்த்தை மோதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. பிரேசில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அரசு பலமுறை எச்சரித்த போதிலும் குறிப்பிட்ட கணக்குகளை எக்ஸ் நிறுவனம் முடக்கவில்லை. இதனை எடுத்து நீதிபதி மோரஸ் எக்ஸ் வலைத்தளம் பிரேசிலில் செயல்படுவதற்கு தடை விதித்தார்.
இந்த தடையை சட்டரீதியாக எதிர்கொள்ளாத எலான் மஸ்க் நீதிபதியை நேரடியாக விமர்சனம் செய்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார். அதாவது நீதிபதி டி மோரஸ் ஒரு சர்வாதிகாரி என்றும் அவர் சிறைக்கு செல்வார் என்றும் அவர் தன்னுடைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் இருவருக்கும் இடையிலான மோதல் மேலும் வலுத்தது. இந்த நிலையில் எக்ஸ் தளத்திற்கு விதித்த அபராதத்தை பெறும் வரை எலான் மஸ்கின் செயற்கைக்கோள் நிறுவனமான ஸ்டார்லிங்கின் நிதி சொத்துக்களையும் பிரேசில் நீதிமன்றம் முடக்கியது. இதனால் பிரச்னை வலுத்தது. பிரேசில் மக்களை பொறுத்தவரை மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் நீதிபதிக்கு சாதகமாகவும் சிலர் எலான் மஸ்கிற்கு சாதகமாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ஒரு நபர் எக்ஸ் வலைத்தளமும் ஸ்டார்லிங்கும் தனித்தனி நிறுவனங்கள் என்பதால் எக்ஸ் தளத்தின் மீதான செயல்பாடுகளை தடுக்க ஸ்டார்லிங்க் சொத்துக்களை முடக்குவது சரி ஆகாது என கருத்து தெரிவித்து வருகிறார்.
இதனிடையே பிரேசில் நாட்டு அதிபர் லுலா டி சில்வா, நீதிபதி டி மோரஸின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதிக பணம் இருக்கிறது என்பதற்காக எலான் மஸ்க் சட்டத்திற்கு மேலானவர் என கருதி விட முடியாது அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான் என தெரிவித்துள்ளார். இதனிடையே அதிபர் லூலாவை, நீதிபதி மோரஸின் கைப்பாவை என கூறி எலான் மஸ்க் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications