மும்பை: ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கரிஷ்மா மேத்தா விலங்குகளின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் எந்த ஒரு ஃபேஷன் பொருட்களையும் தான் இனி பயன்படுத்த போவதில்லை என அறிவித்துள்ளார்.
உலக அளவில் தற்போது வீகன் வாழ்க்கை முறை பிரபலம் அடைந்து வருகிறது. இதன்படி விலங்குகளிலிருந்து தயாரிக்கப்படும் அல்லது விலங்குகளில் இருந்து பெறப்படும் எந்த ஒரு பொருட்களையும் இவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். அப்படி வீகன் வாழ்க்கை முறைக்கு மாறி இருக்கக்கூடிய ஹுமன்ஸ் ஆப் பாம்பே என்ற பிரபலமான தளத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான கரிஷ்மா தன்னிடம் இருக்கும் விலை உயர்ந்த பல்வேறு ஷூக்கள், ஹேண்ட் பேக்குகள் உள்ளிட்டவற்றை இனி பயன்படுத்த போவதில்லை என அறிவித்துள்ளார்.

மும்பையை சேர்ந்த இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய இந்த விலை உயர்ந்த ஆடம்பர பேஷன் பொருட்களை தான் விற்பனை செய்யப் போவதாகவும், அந்த பணத்தைக் கொண்டு விலங்குகள் நலனுக்காக செயல்படும் அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தன்னிடம் இருக்கும் விலை உயர்ந்த பல்வேறு ஆடம்பர பொருட்களை அவர் புகைப்படமாகவும் பதிவிட்டுள்ளார். அதில் லூயிஸ் விட்டான், பிரதா, ஒய்எஸ்எல், பெண்டி உள்ளிட்ட உலகின் பிரபலமான ஆடம்பர நிறுவனங்களின் ஹேண்ட் பேக்குகள் ,ஷூக்கள் இடம்பெற்றுள்ளன.
ஒரு வெஜிடேரியனாக நான் இறைச்சி உண்பது கிடையாது, அதேபோல விலங்குகளின் தோல்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை மட்டும் பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயமாகும் என கேள்வி எழுப்பியுள்ள அவர் ஆடம்பரம் என்ற பெயரில் விலங்குகளை கொன்று அவற்றின் தோளிலிருந்து தயாரிக்கப்படும் இத்தகைய பொருட்கள் என்னுடைய வாழ்க்கை கொள்கைகளுக்கு எதிரானதாக இருக்கிறது என கூறியுள்ளார். எனவே தான் இவற்றை இனி பயன்படுத்த போவதில்லை என தெரிவித்துள்ளார். இனிவரும் காலத்திலும் தான் விலங்குகளின் தோலில் இருந்து செய்யப்படும் எந்த ஒரு பொருட்களையும் வாங்கி பயன்படுத்த போவதில்லை என கூறியுள்ளார்.
ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே என்பது 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தளமாகும். இது ஒரு கதை சொல்லி தளம் என கூறலாம் , இன்ஸ்டாகிராமில் இந்த பக்கத்தை சுமார் 2.8 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி இந்த பக்கத்தை பின் தொடரும் பிரபலமானவர்களின் ஒருவர் ஆவார். மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவும் இந்த பக்கத்தை பின் தொடர்ந்தவர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications