மீரட்: பொதுவாக திருமண வரன் தேடி செய்தித்தாள்களில் வரும் சில விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். அந்த வகையில் செய்தித்தாளில் ஒருவர் தனக்கு திருமண வரன் வேண்டி வெளியிட்டு இருக்கும் விளம்பரம் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.
மீரட்டை சேர்ந்த ஒரு இளைஞர் தனக்கு மணமகள் வேண்டி செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளார். அதில் அவர் பங்குச்சந்தை முதலீட்டாளராக இருப்பதாகவும் தனக்கு ஆண்டுக்கு 29 லட்சம் ரூபாய் ஊதியம் வருமானம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய முதலீடு ஆண்டுதோறும் 54 சதவீதம் என்ற அளவில் காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அது மட்டும் இன்றி தனக்கு மணமகளாக வர விருப்பமுள்ளவர்களுக்கு பாதுகாப்பான முதலீடுகள் குறித்து ஒரு பவர் பாயிண்ட் பிரசன்டேசனை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்க தயாராக இருப்பதாக அந்த திருமண வரன் கோரும் விளம்பரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விளம்பரம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த இளைஞர் நன்கு படித்தவர், அழகானவர், திறமையானவர் என குறிப்பிடப்பட்டு இந்த விளம்பரமானது வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோல திருமண வரம் தேடும்போது மணமகனின் படிப்பு, ஜாதி என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறுவது வழக்கம்.
ஆனால் இவர் தன்னுடைய வருமானத்தை குறிப்பிட்டதோடு மட்டுமில்லாமல் அது ஆண்டுதோறும் எவ்வளவு வளர்ச்சியடைய போகிறது என்ற விவரங்களையும் குறிப்பிட்டிருப்பது தான் இந்த விளம்பரம் வைரலாக காரணம்.
இதனிடையே பங்குச்சந்தை முதலீடு சார்ந்த வேலைகள் நிலையற்றவை என ஒரு கருத்து நிலவி வரும் நிலையில் பங்குச்சந்தை முதலீடுகளும் நிலையான வருமானம் தரக்கூடியது முதலீட்டாளர் என்ற வேலை நிலையானது தான் என்ற ஒரு பார்வையை தரும் வகையில் இந்த விளம்பரம் அமைந்துள்ளதாக ஒரு பயனர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். பலரும் இந்த விளம்பரத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் அதே நேரத்தில் கிண்டல் செய்தும் பின்னூட்டங்களை பதிவு செய்துள்ளனர்.
ஒரு சிலர் ஆண்டுக்கு 54 சதவீத வளர்ச்சி என்பது நிச்சயமாக வாய்ப்பே கிடையாது என தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் அந்த பிபிடி மட்டும் தங்களுக்கு அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும் என பதிவு செய்துள்ளனர். சில பயனாளர்கள் இது ஏமாற்று வேலையாக கூட இருக்கலாம் என்பதால் இது போன்ற விளம்பரங்களை யாரும் நம்ப கூடாது என கூறியுள்ளனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications