இந்தியாவில் இருப்பவர்களுக்கு என்னவோ அமெரிக்காவில் பணிபுரிபவர்களை லக்சரியாகத்தான் பார்க்கத் தோன்றும். அவர்களுக்கா கஷ்டம் இருக்கப் போகிறது? என்ற எண்ணம் வந்துவிடும். ஆனால் அந்தந்த இடங்களுக்கு சென்று பார்த்தால் தான் அவர்களுடைய கஷ்டம் தெரியவரும். உண்மையில் அமெரிக்காவில் கோடிகளில் சம்பாதிக்கும் ஒருவர், தான் இன்னும் கஷ்டபட்டு கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவருடைய பதில் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அமேசான் நிறுவனம் இன்றைய இளைஞர்களின் கனவு நிறுவனம் என்றே சொல்லலாம். தங்களுக்கு அமேசானில் எப்படியாவது ஒரு வேலை கிடைத்துவிடாதா? என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில், அங்கு பணி புரியும் நபர் தான் இன்னும் பணக் கஷ்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதில் சுவாரசியம் என்ன தெரியுமா? அவருடைய ஆண்டு வருமானம் ரூ.2 கோடிக்கும் மேல்.
அமெரிக்காவின் சியாட்டலில் இருக்கும் அமேசான் நிறுவனத்தில் சீனியர் ப்ராடக்ட் மேனேஜராக பணிபுரிபவர் ஈஷான் ஜெயின். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் சமீபத்தில் பிசினஸ் இன்சைடர் இதழில் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஈஷான் 3 லட்சம் டாலர் வரையில் வருமானம் பெறுகிறார். இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 2.8 கோடி.

அதோடு அமேசான் நிறுவனம் ஈஷானுக்கு மருத்துவ காப்பீட்டு வசதியையும் வழங்குகிறது. இப்படி சம்பாதிக்கும் ஈஷான் தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து பாதுகாப்பாக உணரவில்லை என்று ஓபனாக பேசியுள்ளார். அப்படி அவருக்கு என்ன நடக்கிறது? அவருடைய வரவு செலவு என்ன? என்பதைப் பார்ப்போம்.
ஈஷான் தற்போது 285000 டாலர் ஆண்டு வருமானமாக பெறுகிறார். வரி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்கு பணம் எடுக்கப்பட்ட பிறகு சுமார் 12,000 டாலர் வரை ஒவ்வொரு மாதமும் கைக்கு கிடைக்கிறது. இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.11 லட்சம். ஒவ்வொரு மாதமும் ரூ.11 லட்சம் என்பது இந்தியர்களுக்கு மிகப்பெரிய வருமானம். ஆனால் இந்த வருமானமும் ஈஷானுக்கு போதவில்லையாம். காரணம் அவருடைய குடும்பத்தில் அவர் மட்டும்தான் சம்பளம் பெறுபவராக இருக்கிறார்.
மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் இரண்டாவது குழந்தை பிறக்கப் போகிறதாம். அப்படி இருக்கையில் அமெரிக்காவில் விலைவாசி உயர்வை சமாளித்து குடும்பத்தை நடத்துவதே மிகப்பெரிய போராட்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் ஈஷான் கிட்டத்தட்ட 5000 டாலரை, தான் 2023-ஆம் ஆண்டு வாங்கிய வீட்டிற்கு ஈஎம்ஐ செலுத்த பயன்படுத்துகிறார். 5000 டாலர் என்றால் இந்திய மதிப்புக்கு ரூ.4.7 லட்சம்.
ஈஷானுக்கு 50 வயதிலேயே ரிட்டயர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக முன்கூட்டியே சேமித்து வருகிறார். ஒவ்வொரு மாதமும் 2000 டாலரை பணமாக சேமித்து வருகிறார், மற்றொரு 2000 டாலரை ஓய்வூதிய நிதிக்காக சேமித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 50,000 டாலர் வரை சேமிக்கிறார். ஈஷான் கூடுதலாக தங்கம் மற்றும் வெள்ளியிலும் முதலீடு செய்துள்ளார். இதைத் தவிர இந்தியாவில் மூன்று முதல் நான்கு சொத்துக்களையும் வைத்திருக்கிறார். இதை வைத்து 50 வயதுக்கு பிறகு நிம்மதியான வாழ்க்கையை வாழ இலக்கு வைத்திருக்கிறார்.
தினசரி செலவுகளுக்கும் அதிகம் செலவு செய்து வருகிறார், ஒவ்வொரு மாதமும் காட்ஸ்கோ போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டும் 1500 டாலர் செலவாகிறது. மேலும் பிற சூப்பர் மார்க்கெட்டுகளில் 400 முதல் 500 டாலர்களை மளிகை சாமான்கள் வாங்க செலவு செய்கிறார். கரண்ட் பில், குடிநீர் கட்டணம் மற்றும் தினசரி செலவுகளுகு ஒவ்வொரு மாதமும் 800 டாலர் செலவாகிறது.
ஈஷான் ஒரு டெஸ்லா காரையும் வைத்திருக்கிறார். அதற்கு மாதத்தவனையாக 630 டாலர் செலவாகிறது. இதை தவிர மனைவிக்கு உதவியாக இருக்கும் உதவியாளர்களுக்கு ஒரு நாளைக்கு 100 முதல் 250 டாலர் வரை செலவு செய்கிறாராம். இப்படி திட்டமிட்டு செலவு செய்யும் ஈஷானிடம் தற்போது எமர்ஜென்சி ஃபண்டு இல்லையாம்.
பொருளாதார நிபுணர்கள் அடுத்த 6 மாதங்களுக்கான செலவை சமாளிக்க பணம் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கின்றனர். அனால் அவசர தேவை ஏற்பட்டாலும் ஈஷான் கிரெடிட் கார்டை தான் பயன்படுத்தி வருகிறார். சில சமயங்களில் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து கைமாத்தாக பணம் வாங்கிக் கொள்கிறார். விரைவில் தன் குழந்தைகளின் கல்விக்காக 500 டாலர் வரை சேமிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார். இதை தவிர கடந்த வருடம் டூர் சென்று வர அவர் செய்த செலவுகளுக்காக 20,000 டாலர் வரை தனிநபர் கடனுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது மாதம் ரூ.11,000 சம்பளம் வாங்கினாலும் சரி, மாதம் ரூ.11 லட்சம் சம்பளம் வாங்கினாலும் சரி.. ஒருவர் செய்யும் செலவுகளுக்கு ஏற்ப கஷ்டம் இருக்கத்தான் போகிறது. சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க ஆடம்பர வாழ்க்கைக்கு பழகிக் கொண்டே போனால் கோடிகளில் சம்பாதித்தாலும் நிம்மதி கிடைக்காது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. எனவே தேவைக்கேற்ப வாழ கற்றுக் கொண்டால் இருப்பதை வைத்து சிறப்புடன் வாழலாம்!


Click it and Unblock the Notifications