பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் பல லட்சம் கோடிகளை நன்கொடையாக வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
வரும் திங்கள்கிழமை ஜனவரி 20ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் சரியாக 12 மணி அளவில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்காக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் பெருமளவில் பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளன . டிரம்ப் தலைமையிலான அரசுடன் இணக்கமாக செயல்பட விரும்புகிறோம் என்பதை வெளிப்படுத்தவே நிறுவனங்கள் இப்படி நன்கொடை வழங்குவது தெரிய வருகிறது.

மெடா: மார்க் ஜக்கர்பெர்குக்கு சொந்தமான மெடா நிறுவனம் டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு 1 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. மார்க் ஜக்கர்பெர்க்கும் கூட நேரடியாக இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்க இருக்கிறார்.
கூகுள்: அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தின் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் டிரம்பின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்காக 1 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. மேலும் தங்களுடைய யூடியூப் பக்கத்தில் பதவியேற்பு நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயிங்: மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், டிரம்பின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்காக 1 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. கடந்து 2017 ஆம் ஆண்டு டிரம்பின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு 1 மில்லியன் டாலரை தானமாக வழங்கியது.
மைக்ரோசாப்ட்: இந்த நிறுவனம் டொனால்ட் ட்ரம்பின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு 1 மில்லியன் டாலரை வழங்கி இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சிக்கும், 2021 ஆம் ஆண்டு ஜோ பைடனின் பதவி ஏற்பு நிகழ்ச்சியிலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் 5 லட்சம் டாலர்களை நன்கொடையாக வழங்கியிருந்தது.
அமேசான்: அமெரிக்காவின் மிகப்பெரிய இ காமர்ஸ் தளமான அமேசான் 1 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ் பதவியேற்பு நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ள இருக்கிறார்.
ஆப்பிள் : டிம் குக் தலைமையில் செயல்படக்கூடிய ஆப்பிள் நிறுவனம் 1 மில்லியன் டாலரை டிரம்பின் பதவி ஏற்பு நிகழ்வுக்காக நன்கொடையாக வழங்கி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அதிபர் பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போதும் ஆப்பிள் நிறுவனம் கணிசமான தொகையை நன்கொடையாக வழங்குகிறது.
இதே போல ஜெனரல் மோட்டார்ஸ், ஊபர், ஓபன் ஏஐ, டொயோட்டா ஆகிய நிறுவனங்களும் கணிசமான தொகையை டிரம்பின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்காக தானமாக வழங்கியுள்ளன.
பிபிசி வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் பார்க்கும்போது பதவி ஏற்பு நிகழ்ச்சிக்காக மட்டும் 200 மில்லியன் டாலர்கள் வரையிலான பணம் நன்கொடையாக பெறப்பட்டிருக்கிறது. முன்னதாக 2021ஆம் ஆண்டு ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்வில் 62 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக பெறப்பட்டிருந்தது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications