வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றதை அடுத்து முதன்முறையாக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது இந்தியாவை விமர்சனம் செய்த அவர் பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார்.
எம்பிக்கள் மத்தியில் உரையாற்றிய டிரம்ப் 2021ஆம் ஆண்டு காபூல் விமான நிலைய தாக்குதலில் தொடர்புடைய முக்கியமான தீவிரவாதியை பிடிப்பதற்கு உதவி செய்ததற்காக பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். " மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பயங்கரவாதி 13 அமெரிக்க ராணுவ வீரர்களையும் பல அப்பாவிகளையும் காபூல் விமான நிலையத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தி கொலை செய்தான். இந்த நேரத்தில் இந்த கொடூரமான நிகழ்வுக்கு காரணமாக இருந்த முக்கியமான பயங்கரவாதியை நாம் பிடித்து விட்டோம். தற்போது அவன் இந்த கொடூர நிகழ்வுக்கு தண்டனையை எதிர்கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறான்"என டிரம்ப் பேசினார்.

இந்த பயங்கரவாதியை கைது செய்வதற்கு பாகிஸ்தான் நிர்வாகம் பெரிய அளவில் உதவி செய்தது என டிரம்ப் கூறினார். இந்த கொடூரனை கைது செய்வதற்காக உதவி செய்த பாகிஸ்தான் அரசுக்கு தான் நன்றி தெரிவிப்பதாக அப்போது டிரம்ப் பேசினார். இந்த தற்கொலை படை தாக்குதலால் பாதிக்கப்பட்ட அமெரிக்க குடும்பங்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியமான நாள் என்றும் அப்போது குறிப்பிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டன. அப்போது காபூல் விமான நிலையத்தில் திடீரென தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்களும் 170 ஆப்கான் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில் இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளை பிடித்து தண்டனை வழங்குவோம் என அப்போது அமெரிக்க அரசு அறிவித்தது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதியை தான் அமெரிக்கா கைது செய்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் உதவி இருப்பதாக டிரம்ப் நன்றி கூறியுள்ளார். முன்னதாக பாகிஸ்தான் அரசு எஃப் 16 போர் விமானங்களை பராமரிப்பதற்காக 397 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்து டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக மட்டுமே இந்த நிதியானது பயன்படுத்தப்படும் என்றும் இந்தியாவுக்கு எதிராக இந்த நிதியை பயன்படுத்தக் கூடாது என்றும் அமெரிக்கா நிபந்தனை விதித்திருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப், இந்தியா அமெரிக்கா பொருட்களின் மீது அதிகபட்ச வரியை விதிப்பது குறித்து விமர்சனம் செய்தார். மேலும் ஏப்ரல் 2ஆம் தேதியில் இருந்து இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா பதில் வரி விதிக்கும் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications