சீனா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தி அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மூன்று நாடுகளுடனும் வர்த்தகப் போரை தொடங்கி இருக்கிறார்.
சனிக்கிழமை அன்று அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவின்படி மெக்சிகோ நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி துறை சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு 10 சதவீத வரியும், மீதமுள்ள அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரியும் விதிக்கப்படும், அதே போல சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் நடவடிக்கைக்கு எதிர் நடவடிக்கை எடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற எச்சரிக்கையையும் டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தேசிய நலனை கருத்தில் கொண்டு தான் இறக்குமதி வரியை உயர்த்தி இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முக்கிய பிரச்சனை..?
அமெரிக்காவில் 18 லிருந்து 45 வயதுக்குட்பட்ட பெரும்பாலானவர்களின் இறப்புக்கு ஃபென்டெனில் எனப்படும் மருந்து தான் காரணமாக இருக்கிறது. இது தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக பயன்படுத்தப்படக்கூடிய மனோவியல் மருந்து.
சர்ச்சை மருந்து:
ஃபென்டெனில் மருந்தினை ஓபியாய்டுகள் என்றும் அழைக்கிறார்கள். அமெரிக்காவில் 18 முதல் 45 வயதுகுட்பட்ட பெரும்பாலானவர்களின் மரணத்திற்கு இந்த மருந்துதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்த மருந்தினை ஒரு முறை உட்கொண்டவர்கள் அந்த மருந்திருக்கே அடிமையாகி விடுவார்களாம். அமெரிக்காவிற்கு சீனா ,மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து தான் முறைகேடாக இந்த மருந்து கொண்டு வரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் தான் டிரம்ப் நிர்வாகம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
3 நாடுகள்
சீனாவில் இருந்தும் மெக்சிகோ மற்றும் கனடா நாட்டு எல்லைகள் வழியாகவும் பல்வேறு போதைப் பொருட்கள் அமெரிக்க எல்லைக்குள் நுழைவதாக கூறுகிறார் டிரம்ப். இது அமெரிக்க அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் இந்த மூன்று நாடுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காததாலயே தற்போது இறக்குமதி வரியை உயர்த்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அது தவிர கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து முறைகேடாக பலரும் அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர் இதனை தடுப்பதற்கு அந்த நாடுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
3 நாடுகளும் தொடர்பு
மெக்சிகோவை சேர்ந்த போதை மருந்து உற்பத்தியாளர்கள் பலரும் கனடாவில் இருக்கும் சிந்தடிக் ஆய்வகங்களில் தான் ஃபென்டெனில் உள்ளிட்ட போதை மருந்துகளை தயாரிக்கிறார்களாம். இதற்கான ரசாயனங்கள் சீனாவில் இருந்து தான் மெக்சிகோ மற்றும் கனடாவிற்கு வருகிறது. இந்த மருந்து உருவாக்கப்படுவதில் மூன்று நாடுகளுமே தொடர்பு கொண்டிருப்பதாலேயே இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது டிரம்ப் அரசு.
கனடா பதிலடி
அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கனடா அரசு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த இறக்குமதி வரி உயர்வு இரு நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீறுவதாக அமைந்திருக்கிறது என ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பி அடிக்கும் மெக்சிகோ
மெக்சிகோ அதிபர் கிளாடியா சீன்பாம் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுப்போம் எனக் கூறியுள்ளார். சீன அரசு இந்த புதிய உத்தரவை தாங்கள் எதிர்ப்பதாகவும் தங்கள் நாட்டு உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளது. உலக வர்த்தக கூட்டமைப்பின் விதிமுறைகளை மீறி டிரம்ப் நிர்வாகம் மீறியதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications