அமெரிக்கா: இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர்ச்சூழல் உண்டாகியுள்ளது.
இதில் ஈரானின் ராணுவ நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, ஈரானின் செயல்பாடுகளை முடக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக் கூடாது மீறினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா தொடர்ந்து ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.

ஆனால் ஈரான் அமெரிக்காவின் பேச்சுக்கு செவி மடுக்காமல் தாக்குதலை தொடர்கிறது. எனவே ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக ஈரான் ராணுவத்திற்கு உதவி செய்யும் பல நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ஈரான் ராணுவத்திற்கு ஆயுதங்களையும் உபகரணங்களையும் வழங்கும் நிறுவனங்களில் ஈரானில் உற்பத்தியாகும் ஆயுதங்களை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல உதவி செய்யும் நிறுவனங்களை குறி வைத்து அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. இதில் ஈரானுடன் வர்த்தகம் செய்ததாக கூறி மூன்று இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக கூறி பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த மூன்று நிறுவனங்களும் அடங்கும். ஈரானுடன் வர்த்தகம் செய்ததாக கூறி அமெரிக்க கருவூலத்துறை இந்த பொருளாதார தடை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஈரானிடம் இருந்து ஆளில்லா விமானங்களை ரகசியமாக ரஷ்யாவுக்கு விற்பனை செய்வதற்கும், நிதி உதவி செய்வதற்கும் இந்த நிறுவனங்கள் முக்கிய பங்கு வகுத்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. சஹாரா தண்டர் நிறுவனம் ஆளில்லா விமானங்களை ஈரான் ராணுவத்திடம் இருந்து பெற்று மற்ற நாடுகளிடம் சேர்த்து சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுகிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
சஹாரா தண்டர் நிறுவனத்திற்கு உதவி செய்ததாக கூறி ஜென் ஷிப்பிங், போர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் சீ ஆர்ட்ஷிப் மேனேஜ்மெண்ட் ஆகிய3 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பது, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது, ஆபத்தான ராணுவ உபகரணங்களை முறைகேடாக விற்பனை செய்வது என ஈரானின் செயல்பாடுகள் அனைத்துமே உலக அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
ஈரான் தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்தி கொள்ளவில்லை எனில் அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியை தடுக்கும் வகையில் பொருளாதார தடைகளை விதிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications