உலக அளவில் பிரபலமான பங்குச் சந்தை முதலீட்டாளர் வாரன் பஃபெட். இவர் பெர்க்சையர் ஹேத்வே (Berkshire Hathaway) என்ற முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் எந்த பங்குகளை விற்பனை செய்கிறது, வாங்குகிறது என்பதெல்லாம் சர்வதேச அளவில் விவாதப் பொருளாகிறது.
அந்த வகையில் பெர்க்சையர் ஹேத்வே நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தில் வைத்திருந்த பெரும் பகுதி பங்குகளை விற்பனை செய்துள்ளது. ஆப்பிள் நிறுவன பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் வாரன் பஃபெட்டிடம் இருக்கும் ரொக்கத்தின் மதிப்பு 276.9 பில்லியன் டாலர்கள் என உயர்வு கண்டுள்ளது.

கடந்த ஆறு மாதத்தில் மட்டும் வாரன் பஃபெட் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தில் தாங்கள் வைத்திருந்த 55.8% பங்குகளை விற்பனை செய்துள்ளது. முதல் காலாண்டில் 115 மில்லியன் பங்குகளையும் இரண்டாவது காலாண்டில் 390 மில்லியன் பங்குகளையும் விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற பெர்க்சையர் ஹேத்வே நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் வாரன் பஃபெட் தங்களிடம் இருக்கும் பணத்தை செலவு செய்வதற்கு அவசரப்படவில்லை எனக் கூறினார். அதாவது குறைந்த ஆபத்துள்ள, அதே வேளையில் அதிக பணத்தை சம்பாதித்து தரக்கூடியது பங்குகள் கிடைக்கும் வரை பணத்தை செலவிடப் போவதில்லை என கூறியுள்ளார்.
ஆப்பிள் மட்டுமல்லாது பேங்க் ஆப் அமெரிக்கா நிறுவனத்தில் இருந்த பங்குகளையும் பெர்க்சையர் ஹேத்வே நிறுவனம் குறைத்துள்ளது. அதாவது நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பேங்க் ஆப் அமெரிக்கா நிறுவனத்தில் இருந்த பங்குகளில் சுமார் 41.1 பில்லியன் டாலர் அளவிலான பங்குகளை விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது.
திடீரென வாரன்பெட் இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு காரணம் என்ன என்பது குறித்து தெரியாமல் பல்வேறு முதலீட்டாளர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் மற்றும் அந்த நிறுவன பங்கு அதிகபட்ச மதிப்பீட்டில் இருப்பது கூட காரணமாக இருக்கலாம் என்ற தகவல் சொல்லப்படுகிறது.
அண்மைக்காலமாக ஆப்பிள் நிறுவன ஐபோன்களின் விற்பனை சீனாவில் சரிவடைந்து வருகிறது. சீன அரசின் ஒழுங்குமுறை விதிகள் மற்றும் உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என அரசு கூறுவது ஆகியவை காரணமாக சீனாவில் அமெரிக்க நிறுவனங்களின் பொருட்கள் விற்பனை குறைந்து வருகிறது.
ஆப்பிள் ஐபோன் விற்பனையில் முக்கிய சந்தையாக இருந்த சீனாவில் ஆதிக்கத்தை இழந்து வருகிறது. இதனால் வாரன் பஃபெட் இப்படி ஒரு முடிவினை எடுத்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
வாரன் பஃபெட் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து ஆப்பிள் நிறுவன பங்குகளை வாங்கி இருக்கிறார். இதுவரை அவர் 40 மில்லியன் டாலர்களுக்கு பங்குகளை வாங்கியது தெரியவந்துள்ளது. அவர் வாங்கியதில் இருந்து தற்போது வரை ஆப்பிள் நிறுவன பங்கு சுமார் 800 சதவீதம் லாபத்தை தந்துள்ளது.
ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி பெர்க்சையர் ஹேத்வே நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தில் இன்னும் 400 மில்லியன் பங்குகளை சொந்தமாக கொண்டுள்ளது. இதன் மதிப்பு 84.2 பில்லியன் டாலர்கள் ஆகும்.பெர்க்சையர் ஹேத்வே நிறுவனம், தொடர்ந்து ஏழாவது காலாண்டுகளாக பங்குகளை வாங்குவதைவிட விற்பனை செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications