பல்வேறு பணக்கார இந்தியர்களும் கிரீஸ் நாட்டில் சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவது தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் கிரீஸ் நாட்டில் சொத்துக்களை வாங்கும் இந்திய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 37 சதவீதம் என அதிகரித்துள்ளதாம். கிரீஸ் அரசு தன்னுடைய கோல்டன் விசா திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்த நிலையில் அதற்கு முன்னதாக அங்கே நிரந்தர குடியுரிமை பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு இந்தியர்களும் போட்டி போட்டுக் கொண்டு சொத்துக்களை வாங்கியுள்ளனர்.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கிரீஸ் நாட்டில் கோல்டன் விசா திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள. இதற்கு முன்பு இந்திய முதலீட்டாளர்கள் அங்கே நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு குறைந்தபட்சம் 2.5 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் , அதாவது 2.5 லட்சம் யூரோக்கள். அதுவே தற்போது முதல் நிலை நகரங்களில் 8 லட்சம் யூரோக்கள் என உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை நகரங்களில் 4 லட்சம் யூரோக்கள் என உயர்த்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களால் உள்நாட்டு மக்களுக்கு வீட்டு வசதி தொடர்பான எந்த பிரச்சனையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருப்பதாக கிரீஸ் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த விதிமுறைகள் மாறுவதற்கு முன்பாகவே கிரீஸ் நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பல்வேறு இந்திய முதலீட்டாளர்களும் அங்கே பணத்தை வாரி குவித்துள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டு அரசு கோல்டன் விசா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி அந்த நாட்டில் குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டவர்கள் அங்கே இருக்கும் ரியல் எஸ்டேட் அல்லது அரசு பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. எனவே ஐரோப்பாவில் முதலீடு செய்ய வேண்டும் என விரும்பிய பெரும்பாலான இந்தியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கிரீஸ் நாட்டில் முதலீடு செய்து வாடகை வருமானத்தை பெற்று வந்தனர்.
கிரீஸில் வாடகை வருமானம் ஆண்டுக்கு 3-5% வளர்ச்சி அடைகிறது சொத்துக்களின் மதிப்பும் ஆண்டுக்கு 10% வரை உயர்கிறது. நல்ல உயர் தரமான சுகாதார சேவைகள், கல்வி, சிறந்த வாழ்க்கைத்தரம் ஆகியவை காரணமாகவே பெரும்பாலான இந்தியர்கள் கிரீஸ் நாட்டில் முதலீடு செய்வது தெரியவந்துள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications