சென்னை: Software as a service என்ற பிரிவில் செயல்பட்டு வரக்கூடிய நிறுவனம் தான் (Freshworks) ஃபிரஷ்வொர்க்ஸ். இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கும் நடவடிக்கையை ஸோஹோ தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு 1 பில்லியன் டாலர்கள் ரொக்க கையிருப்பு வைத்திருக்கும் லாபத்தில் இயங்கக்கூடிய ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 12 முதல் 13 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்வது நியாயமற்றது எனக் கூறியுள்ளார்.

ஃபிரஷ்வொர்க்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவருடைய இந்த பதிவு அந்த நிறுவனத்தை பற்றியது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அண்மையில் தான் இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 650 பேரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.
அதுமட்டுமின்றி 400 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான தங்களுடைய நிறுவன பங்குகளை பங்குதாரர்களே திரும்ப வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் ரொக்க கையிருப்பு வைத்திருக்கும் ஒரு நிறுவனம், அந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தை விட 1.5 மடங்கு அதிகம் இது.
ஒரு ஆண்டுக்கு 20 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ச்சி அடையும் நிறுவனம், ஆனால் 12 முதல் 13 சதவீதம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குகிறது. இப்படிப்பட்ட ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களிடமிருந்து எப்படி விசுவாசத்தை எதிர்பார்க்கலாம் என ஸ்ரீதர் வேம்பு வினவியுள்ளார்.
ஒரு தொழில் சரியாக போகவில்லை, நஷ்டத்தில் இயங்குகிறது வளர்ச்சியே இல்லை என்ற ஒரு கடினமான சூழல் ஏற்படும்போது அந்த நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதில் ஒரு நியாயம் இருக்கிறது .
ஆனால் வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நிறுவனம் லாபத்தில் இயங்கும் ஒரு நிறுவனம் 400 மில்லியன் டாலர்களை கொடுத்து தங்கள் நிறுவன பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்ளும் திறன் கொண்ட ஒரு நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்றால் எப்படி எடுத்துக் கொள்வது என அவர் கேட்டுள்ளார்.
இந்த 400 மில்லியன் டாலர் தொகையை மற்றொரு தொழிலில் முதலீடு செய்து இங்கே பணி நீக்கம் செய்யும் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாமே? டெக் துறையில் இத்தகைய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றதே? உங்களிடம் தொலைநோக்குப் பார்வை இல்லையா? இவ்வளவு இரக்கமில்லாமலா இருப்பீர்கள் என அவர் கடுமையாக சாடி இருக்கிறார்.
அமெரிக்க கார்ப்பரேட் உலகில் இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் சாதாரணமாகி வருவது வருத்தத்துக்குரியது அது தற்போது இந்தியாவிலும் தொடங்கி இருக்கிறது என அவர் கூறியுள்ளார். இதனால் தான் நாங்கள் பொது நிறுவனமாக மாறவில்லை, தொடர்ந்து ஊழியர் நலன் சார்ந்த நிறுவனமாக செயல்படுகிறோம் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications