ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், தங்களது சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான 8வது ஊதியக் குழுவின் (8th Pay Commission) அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர். இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஊதியக் குழுவை அமைப்பதற்கான குறிப்பு விதிமுறைகள் (Terms of Reference - ToR) இந்த மாத இறுதிக்குள் வரலாம் என்று ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கவுன்சில் - கூட்டு ஆலோசனை (NC-JCM) பணியாளர்கள் பக்க செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, இதுகுறித்து கூறுகையில், விரைவில் குறிப்பு விதிமுறைகளுக்கு அரசு ஒப்புதல் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மாதத்திற்குள் அதை எதிர்பார்க்கிறோம் ஆனால் உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஊதியக் குழுவை அமைப்பதற்கு முன், அதன் செயல்பாடுகளுக்கான வழிமுறைகள் மற்றும் நோக்கங்களை வரையறுப்பதே குறிப்பு விதிமுறைகள் ஆகும். இந்த ToR-இல், ஊதியக் குழு சம்பள திருத்தங்களுக்கான ஃபிட்மென்ட் காரணி (Fitment Factor), குறைந்தபட்ச ஊதியக் கணக்கீடு மற்றும் பிற திருத்தங்கள் குறித்து விரிவான ஆலோசனைகளை நடத்தும். மத்திய அரசுக்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையிலான சிக்கல்களைத் தீர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் NC-JCM, இந்த விவாதங்களில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும்.
சம்பளக் கணக்கீடு-புதிய கோரிக்கைகள்: 7வது ஊதியக் குழுவின் கீழ், குறைந்தபட்ச ஊதியம் மூன்று அலகுகளின் நுகர்வுத் தேவைகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது (சம்பாதிக்கும் கணவர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள்). ஆனால், NC-JCM இன் ஊழியர்கள் தரப்பு, இந்த அணுகுமுறை முழுமையற்றது என்று வாதிடுகிறது. இது வயதான பெற்றோரின் நுகர்வுத் தேவைகளைப் புறக்கணிப்பதாகக் கூறிய அவர்கள், ஐந்து அலகுகளின் அடிப்படையில் குறைந்தபட்ச சம்பளம் கணக்கிடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பெற்றோரைப் பராமரிப்பது ஒரு சட்டக் கடமை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், ஊழியர் மன்றம், ஊதிய விகிதங்களை இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக நிலை 1-ஐ 2 உடன், நிலை 3-ஐ 4 உடன் மற்றும் நிலை 5-ஐ 6 உடன் இணைக்க வேண்டும் என்று கோரியுள்ளது. இது, ஊழியர்களின் தொழில் வளர்ச்சியில் ஏற்படும் தேக்கநிலையைத் தடுக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
நிதித் தாக்கம் மற்றும் காலக்கெடு: வரலாற்று ரீதியாக, ஊதியக் குழுக்கள் தங்கள் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க 18 மாதங்களுக்கும் மேலாக எடுத்துக்கொள்கின்றன. அதற்குப் பிறகு, அரசாங்கம் அவற்றை மதிப்பாய்வு செய்து, ஒப்புதல் அளிக்க 3 முதல் 9 மாதங்கள் ஆகும்.
7வது ஊதியக் குழு, 2.57 ஃபிட்மென்ட் காரணியுடன் அமல்படுத்தப்பட்டபோது, அது ரூ.1.02 லட்சம் கோடி நிதித் தாக்கத்தை ஏற்படுத்தியது. கோடக் பங்கு முதலீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 8வது ஊதியக் குழுவின் நிதித் தாக்கம் ரூ.2.4 லட்சம் கோடி முதல் ரூ.3.2 லட்சம் கோடி வரை இருக்கலாம் என்றும், ஃபிட்மென்ட் காரணி 1.8 ஆக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் குறிப்பு விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வரும் பட்சத்தில், ஊதியக் குழுவின் பணிகள் விரைவில் தொடங்கி, மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வுக்கான சாத்தியம் உறுதியாகும்.


Click it and Unblock the Notifications