தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நகரம் கோவை. இங்கே பாரம்பரியமாக உற்பத்தி துறைகள் செயல்பட்டாலும் அண்மை காலமாக ஐடி நிறுவனங்கள், ஜிசிசி மையங்களின் நகரமாக மாறி வருகிறது.
ஏராளமான டெக் நிறுவனங்களும், ஜிசிசி மையங்களும் கோயம்புத்தூரை நோக்கி வருகின்றன. இதற்கு ஏற்ப நகரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு கோவையில் மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர திட்டமிட்டது. சென்னையை தொடர்ந்து, கோவை மற்றும் மதுரையில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.

கோவையில் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரித்து தமிழக அரசிடம் வழங்கியது. இதன்படி கோவையில் 10,740 கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு கடந்த ஆண்டில் இந்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கேட்டிருந்தது.
ஆனால் மத்திய அரசு மக்கள் தொகையை காரணம் காட்டி, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பி விட்டது. இந்த சூழலில் திட்ட அறிக்கையில் திருத்தம் செய்து, கடந்த மே மாதம், மீண்டும் தமிழக அரசு கோவை, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் மீண்டும் மத்திய அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் நிராகரித்து ஏமாற்றம் தந்துவிட்டது.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி தராமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இங்கே மெட்ரோ ரயில் சேவை வழங்குவதற்கு தேவையான மக்கள் தொகை இல்லை என்பது தான். 20 லட்சம் மக்களாவது வசிக்கும் நகரத்திற்கு தான் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படும் கோவையில் சுமாட் 15 லட்சம் மக்களே இருக்கின்றனர் என கூறியது. ஆனால் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் அளவீடுகளை கொண்டே மத்திய அரசு கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்காமல் இருக்கிறது தற்போது மக்கள் தொகை கணக்கெடுத்தால் நிச்சயம் தேவையான 20 லட்சத்தை விட அதிகமாகவே இருப்பார்கள் என நிபுணர்கள் கூறினர்.
இந்த சூழலில் தான் தற்போது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. தமிழ்நாட்டிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின் கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.தற்போது நடந்து வரும் 16ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு, நிச்சயம் நல்ல மாற்றத்தை தரும், இது கோவை,மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த உதவும் என சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த உடன் தமிழக அரசு சார்பில் புதிய மக்கள் தொகை எண்ணிக்கையை குறிப்பிட்டு இந்த நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அவசியம் என்பதை குறிப்பிட்டு புள்ளி விவரங்களுடன் புதிய ஆய்வறிக்கையை தந்தால் மத்திய அரசின் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.


Click it and Unblock the Notifications

