உலகமே ஒரு பக்கம் போனாலும், நாங்கள் நினைத்தால் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே ஸ்தம்பிக்க வைக்க முடியும் என்பதை டிரம்புக்கு மீண்டும் ஒருமுறை சொல்லாமல் நிரூபித்து காட்டியுள்ளது ஈரான். கடந்த சில வாரங்களாகவே ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் பிரச்சனைகளுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டு வந்தது. இது சர்வதேச பொருளாதாரத்தை என்ன நிலைக்கு கொண்டு செல்லுமோ? பணவீக்கம் என்ன ஆகுமோ என்ற பதற்றமான சூழல் இருந்து வந்தது. ஆனால் அதற்கெல்லாம் தற்காலிகமாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்டுள்ள 14 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒட்டுமொத்த உலகத்தையும் நிம்மதி கடலில் ஆழ்த்தியுள்ளது.

இது ஒரு புறம் நிம்மதி அளித்தாலும், இது இப்படியே தொடர்ந்து விடக் கூடாதா என்று ஈரான் மக்கள் மட்டுமல்ல, உலகமே எண்ணிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பிரச்சனை இவ்விரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை மட்டும் அல்ல. சர்வதேச அளவில் எரிபொருள் சந்தையை பற்ற வைத்துள்ளது. இன்னும் என்னவாகுமோ? எரிபொருள் மட்டுமல்ல, விலைவாசி என்ன ஆகும்? இதுபோன்ற பல கேள்விகளும், குழப்பங்களும் மக்கள் மத்தியில் காணப்பட்டது.
ஆனால் ஈரான் கொடுத்த இந்த ஒற்றை அமைதி அப்டேட்டால், ஒரே நாளில் அப்படியே தலைகீழாக எல்லாம் மாறியது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 18% சரிந்து, 92.6 டாலர் என்னும் அளவுக்கு அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 6% குறைந்து, 103.40 டாலராகவும் காணப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரை, அந்நாட்டின் சம்மதம் இல்லாமல் உலக எண்ணெய் சந்தையில் ஒரு அணுவும் அசையாது என்பது இந்த அதிரடி மாற்றத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை தெளிவாகியுள்ளது.
இது ஈரான் இல்லாமல் உலக எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை சாத்தியமில்லை என்பதை மீண்டும் சத்தமாக உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட இந்த அதிரடி விலை வீழ்ச்சி, இந்தியா போன்ற இறக்குமதி நாடுகளுக்கு ஒரு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது. போர் பீதி விலகி சந்தை தலைகீழாக மாறிய பின்னணி என்ன? பெட்ரோல், டீசல் விலை இனி குறையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இருப்பினும் இது தற்காலிகமாக ஒப்பந்தம் தானே. மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டால் என்ன ஆகும் என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது.
ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முன்மொழியப்பட்ட 2 வார போர் நிறுத்தத்திற்கு தான் ஒப்புக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதனிடையே தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் போர் நிறுத்தத்திற்கு ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கும் முறையாக ஓப்புக் கொள்வதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதனிடையே தான் இரண்டு வார காலத்திற்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக போக்குவரத்து சாத்தியமாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
ஈரான் ஒரு முடிவுக்கு வராவிட்டால், ஈரானுக்கு நரகத்தை காட்ட வேண்டியிருக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், தற்போது இந்த நடவடிக்கையானது வந்துள்ளது. ஈரானிடமிருந்து 10 அம்சங்களை கொண்ட ஒரு முன்மொழிவு எங்களுக்கு கிடைத்துள்ளது. அது பேச்சு வார்த்தைக்கு ஏற்ற அடிப்படையாக இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். முன்பு சர்ச்சையாக இருந்த பெரும்பாலான அம்சங்கள் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. ஆக இது இந்த இரண்டு வார ஒப்பந்தத்தை இறுதி செய்ய உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் இஸ்ரேல் முடிவு என்னவாக இருக்கும் என்ற பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவையே பேச்சு வார்த்தைக்கு வர வைக்கும் ஈரானின் ராஜதந்திரம், எண்ணெய் சந்தையை தீர்மானிக்கும் சக்தியாகயே உள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications