அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருந்த இந்தியர்கள் தாயகத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்கும் நிலையில் இவ்வாறு இவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வெளிநாட்டவர்கள் நுழைவதை தடுப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார் . தான் பதவி ஏற்ற உடனேயே அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கான பணிகளை தொடங்கிவிட்டார். அந்த வகையில் தான் சுமார் நூற்றுக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமான மூலமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிற்கு அனுப்பி வைக்கக்கூடிய நபர்களில் சிலர் விசா கால முடிவடைந்தும் அமெரிக்காவிலிருந்து வெளியேறாமல் அங்கேயே தங்கி இருந்தவர்கள், பெரும்பாலானவர்கள் எந்த ஒரு விசாவும் பெறாமல் கனடா , மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்கிருந்து அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள். சிலர் போலியான ஆவணங்கள் மூலம் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என சொல்லப்படுகிறது.
இவ்வாறு இவர்கள் முறைகேடாக அமெரிக்காவினுள் நுழைவதற்கு காரணமாக இருந்த ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. வெளிநாட்டு படிப்புகளுக்கான ஆலோசனை அமைப்பை நடத்தும் பஞ்சாப் மாநிலத்தின் நிதின் சாவ்லா முதலில் கனடா அரசு சட்டவிரோதமாக குடியிருந்த இந்தியர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்பியது தற்போது அமெரிக்கா திருப்பி அனுப்பி இருக்கிறது. கிட்டத்தட்ட 18,000 இந்தியர்கள் அமெரிக்காவில் இவ்வாறு சட்ட விரோதமான முறையில் நுழைந்திருப்பது தெரிய வருகிறது என கூறுகிறார்.
அவர்கள் மீண்டும் தாயகத்திற்கு பத்திரமாக வருகிறார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும் அவர்களிடம் எவ்வாறு அமெரிக்காவிற்குள் முறைகேடாக செல்ல முயன்றது என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் எனவும் இதற்காக அவர்களுக்கு உதவி செய்த ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் கூறுகிறார். ஏற்கனவே இந்தியாவில் வேலை வாய்ப்பு பிரச்சனை இருக்கும் நிலையில் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியும் அவர் முன் வைத்துள்ளார்.
அதேபோல சட்ட ரீதியான முறையில் அமெரிக்காவிற்கு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என எஜூபிளானட் என்ற வெளிநாட்டு படிப்புகளுக்கான ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் கௌரவ சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அமெரிக்காவுக்கு சென்ற பலரும் நேரடியாக அமெரிக்காவிற்கு செல்லவில்லை, கனடா மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு அங்கிருந்து தான் முறைகேடாக அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளனர் ,இந்திய மாணவர்கள் பலர் அமெரிக்க காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல்களும் தங்களுக்கு கிடைப்பதாக கூறுகிறார் வினய் குமார் ஹரி.
வெளிநாட்டு படிப்பு சம்பந்தப்பட்ட ஆலோசனை அமைப்பை நடத்தும் இவர், சட்டவிரோதமாக ஒரு நாட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணமே யாருக்கும் வந்து விடாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய மாணவர்களையும் இளைஞர்களையும் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் அனுப்பி வைக்கும் பணிகளில் பெரிய கும்பலே ஈடுபட்டுள்ளது இதற்காக அவர்கள் லட்சக்கணக்கிலான பணத்தையும் பெற்றுக் கொள்கின்றனர் என்கிறார். எனவே அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் என விரும்புபவர்கள் அரசிடம் பதிவு செய்த ஏஜென்சிகள் வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என இவர்கள் கூறுகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications