இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்கு நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும், அதேபோல பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். இந்த இரண்டு தேர்வுகளிலும் தகுதி வாய்ந்த மதிப்பெண் பெறக்கூடிய மாணவர்களுக்கு தான் கல்லூரிகளில் சீட் கிடைக்கும்.
அண்மை ஆண்டுகளாக நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடப்பது வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறது. மே 3ஆம் தேதி நடந்த நீட் நுழைவு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கசிந்ததாக தகவல் வெளியாகி அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிபிஐ இந்த விசாரணை நடத்தி வரும் நிலையில் மே மாதம் நடந்த தேர்வினை மத்திய அரசு ரத்து செய்ததது. ஜூன் 21ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட சில மாணவர்கள் செய்த தவறால் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் இதனால் அவதிக்கு ஆளாகினர். ராஜஸ்தானில் தொடங்கப்பட்ட இந்த விசாரணை தற்போது மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களுக்கும் விரிவாகிக இருக்கிறது. லட்சக்கணக்கில் மாணவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர்களே வினாத்தாள்களை கசிய விட்டு இருப்பது விசாரணையில் தெரிய வருகிறது.
தேர்வுக்கு வரக்கூடிய மாணவர்களிடம் கடுமையான கட்டுப்பாடு காட்டப்படுகிறது. காது தோடு முதல் சோதனை செய்கிறார்கள் குறிப்பிட்ட ஆடைகளை மட்டுமே அணிந்து வர நிற்பந்தம் செய்கிறார்கள், ஆனால் ஆசிரியர்கள் மறுபுறம் வினாத்தாள்களை கசிய விட்டு இருக்கின்றனர் இது மாணவர்கள் மத்தியிலும் பெட்ரோல் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழலில் தான் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ தேர்வுகளை ஒருங்கிணைத்து ஒரே தேர்வாக நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே இராதாகிருஷ்ணன் கமிட்டி செய்த பரிந்துரை அடிப்படையில் நாடு முழுவதும் பொது நுழைவு தேர்வினை நடத்த சாத்திய கூறுகள் உள்ளனவா என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறதாம்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ தேர்வையும் ஒருங்கிணைத்து ஒரே பொது நுழைவு தேர்வாக நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்றும், குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் மட்டும் மாற்றம் கொண்டு வந்து மருத்துவ படிப்புக்கு என தனியாக கேள்விகளும் பொறியியல் படிப்புக்கான கேள்விகளும் வழங்கப்பட்டு ஒரே தேர்வாக நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கமிட்டி பரிந்துரை செய்திருந்தது.
இதன்படி நாடு முழுவதுமே மாணவர்களுக்கு ஒரே நாளில் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதில் பொறியியல் மாணவர்களுக்கு கணித பிரிவும் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு உயிரியல் பிரிவும் தனித்தனி கேள்விகளாக கேட்கப்படும். இந்த ஐடியா சிறப்பாக இருக்கிறது என நாடாளுமன்ற நிலை குழு உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.ஒரு வேளை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தால் நீட், ஜே இ இ நுழைவு தேர்வுகளுக்கு குட் பை சொல்லப்பட்டு நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்வு முறை வந்துவிடும்.


Click it and Unblock the Notifications

