இங்கிலாந்து பிரதமராகியுள்ள ரிஷி சுனக் இந்திய வம்சாவளியினை சேர்ந்தவர் என்பது பலருக்கும் உற்சாகத்தினை தந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசும், ரிஷி சுனக் அரசும் வர்த்தகம் குறித்தான தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவுகள் வருமா? இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா? என்பது பலருக்கும் கேள்வியினை எழுப்பியுள்ளது.
குறிப்பாக FTA குறித்தான சாதகமான அறிவிப்பு வருமா? என்பதும் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
FTA ஆலோசனை
இது குறித்து நேற்று பிடிஐ -யில் வெளியான செய்தியொன்றில் இந்திய அரசும், இங்கிலாந்து அரசும், இருதரப்பு தடையற்ற வர்த்தகம் குறித்தும், FTA வர்த்தகம் குறித்தும் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த மாத இறுதியிலேயே ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்த நிலையில், அப்போதே இது குறித்து விவாதம் நடந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் பிரதமர் மோடி இரு நாடுகளின் வலிமையான கூட்டாண்மையை நாங்கள் வலுப்படுத்த நினைக்கிறோம். FTA குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்றும் கூறியிருந்தார்.
விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்
கடந்த ஏப்ரல் மாதமே இது குறித்து பேச்சு வார்த்தை முடிவடைய இருந்த நிலையில், இங்கிலாந்தில் நிலவி வந்த அரசியல் பிரச்சனை, உலகளாவிய மந்த நிலை என பல காரணிகளுக்கு மத்தியில் அது நின்று போனது. எனினும் தற்போது புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றுள்ள நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு உள்ள சவால்கள்
ஏனெனில் இங்கிலாந்தில் 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்தின் மத்தியில், 33 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் பல்வேறு அரசியல் மாற்றங்களை கண்டுள்ள இங்கிலாந்து, தற்போது அதன் பணவீக்க பிரச்சனையில் இருந்து வெளிவர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பொருளாதாரத்தினை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. வேலை வாய்ப்பினை அதிகரிக்க வேண்டும் என பல கட்டாயத்தில் உள்ளது.
விரைவில் முடிவு வரலாம்
ஆக இங்கிலாந்துக்கு தற்போதைய நிலையில், இந்தியாவுடனான FTA ஒப்பந்தம் என்பது மிக பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் விலைவாசி குறைந்தால், அது மிக பயனுள்ளதாகவும் இருக்கும். ஆக விரைவில் இந்த ப்ரீ டிரேட் ஒப்பந்தம் குறித்து முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கும் மிக பயனுள்ள ஒரு ஒப்பந்தமாகவே இருக்கும் எனலாம்.


Click it and Unblock the Notifications