மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 8-வது ஊதியக்குழு (8th Pay Commission) குறித்த அதிகாரப்பூர்வ நகர்வுகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. விலைவாசி உயர்வு ஒருபுறம் வாட்டி வதைத்தாலும், மறுபுறம் சம்பள உயர்வு குறித்த இந்த செய்தி ஊழியர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை விதைத்துள்ளது.
வெறும் சம்பள உயர்வு மட்டுமல்ல, 34% வரையிலான இந்த அதிரடி மாற்றமானது, லட்சக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார நிலையையே மாற்றியமைக்க போகிறது. அடிப்படை ஊதியம் எவ்வளவு உயரும்? பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த எதிர்பார்ப்புகள் என்ன? மத்திய அரசின் மாஸ்டர் பிளான் என்னவாக இருக்கும்? மத்திய அரசு ஊழியர்களின் தலையெழுத்தையே மாற்றப்போகும் அந்த 3 முக்கிய அப்டேட்கள் என்ன? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

வரவிருக்கும் 8-வது ஊதியக்குழு, சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு மிகப்பெரிய நிதியாதார உயர்வை வழங்கலாம். இந்த ஊதியக்குழு 2.57 என்ற பிட்மென்ட் பேக்டர் (Fitment Factor) முறையை பரிசீலித்து வருகிறது. இது சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தலாம்.
என்டிடிவி அறிக்கையின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை மாற்றி அமைக்க பயன்படுத்தப்படும் முக்கிய காரணியான பிட்மென்ட் பேக்டர் 2.57 ஆக இருக்க வேண்டும் என 8-வது ஊதியக்குழு பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், ஒட்டுமொத்த சம்பளம் மற்றும் இதர படிகளில் சராசரியாக சுமார் 34% உயர்வு ஏற்படக்கூடும்.
இந்த கொள்கை ஓய்வூதியங்களுக்கும் பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஊதியக் குழுக்களில் சம்பளத்தோடு சேர்ந்து ஓய்வூதிய பலன்களும் மாற்றியமைக்கப்பட்டதை போலவே, இப்போதும் ஓய்வூதியதாரர்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கலாம்.
எவ்வளவு சம்பளம் உயரும்?
உங்களுடைய அடிப்படை ஊதியத்தை பிட்மென்ட் பேக்டர் நேரடியாக பெருக்கி மாற்றியமைக்கும்.
தற்போதைய அடிப்படை ஊதியம் - ரூ.18,000
பரிந்துரை செய்யப்படும் பிட்மென்ட் பேக்டர் - 2.57
புதிய அடிப்படை ஊதியம் - 18,000*2.57= ரூ.46,260
அடிப்படை ஊதியத்தில் ஏற்படும் இந்த அதிரடி உயர்வு, அதோடு இணைந்த அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் இதர படிகளையும் தானாகவே உயர்த்தும்.
8-வது ஊதியக்குழு நவம்பர் 2025ல் அமைக்கப்பட்டது. இது ஜனவரி 1, 2026 முதல் தொடங்கி 18 மாத காலக்கெடுவுக்குள் தனது அறிக்கையை சமர்பிக்க உள்ளது. இருப்பினும் இந்த பரிந்துரைகள் ஜனவரி 1,2026 முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது. இதன் மூலம் புதிய ஊதியம் நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய காலத்துக்கான நிலுவைத் தொகையை ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பெற வாய்ப்புள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட இந்த பிட்மென்ட் பேக்டர் அங்கீகரிக்கப்பட்டால், சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய ஊதிய மாற்றமாக இது அமையும். இருப்பினும், இறுதி முடிவுகள் அரசின் ஒப்புதல் மற்றும் நிதிநிலை சூழலை பொறுத்தே அமையும்.


Click it and Unblock the Notifications