வருமான வரிச் சுமையை குறைக்க பழைய வரி நடைமுறையில் 80சி பிரிவின் கீழ் பல்வேறு முதலீடுகளை சுட்டிக்காட்டி வரி விலக்கு பெறும் வசதி உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், ஈக்விட்டி இணைக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஓர் நிதியாண்டில் அளிக்கும் பங்களிப்பில் ரூ.1.5 லட்சம் வரை குறிப்பிட்டு வரி விலக்கு பெறலாம்.
இது பழைய வரி தாக்கல் நடைமுறையில் மட்டுமே கிடைக்கும், புதிய வரி நடைமுறையில் கிடைக்காது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த 1.5 லட்சம் ரூபாய் என்ற வரம்பினை உயர்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.

ஏனெனில் கடந்த 2014 ஆம் ஆண்டில் அருண்ஜெட்லி நிதி அமைச்சராக இருந்தபோது 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு வரம்பினை 1.5 லட்சம் ரூபாயாக மாற்றினார். அப்போதிலிருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக இந்த வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை.
இந்த 10 ஆண்டு காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு 80சி பிரிவின் கீழ் வழங்கப்படக்கூடிய முதலீடுகளுக்கான வரி விலக்கு வரம்பினை உயர்த்த வேண்டும் என கோரப்படுகிறது.
இந்த தொகையினை உயர்த்துவதன் மூலம் ஈஎல்எஸ்எஸ் மியூச்சுவல் திட்டங்கள், தேசிய சேமிப்பு பத்திரம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தவர்கள் லாபம் அடைவார்கள். மேலும் இவற்றில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மிடில் கிளாஸ் மக்களுக்கு இது பெரிய நிவாரணமாக இருக்கும் என கூறுகின்றனர். வரி சுமையை குறைப்பதால் அவர்கள் சேமிப்பு மற்றும் முதலீடுகளில் கவனம் செலுத்துவார்கள் என்கின்றனர்.
ஊதியம் பெறக்கூடிய பெரும்பாலான தனி நபர்களின் மிக விருப்பமான முதலீடு திட்டமாக இருப்பது ஈஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்டுகள். தற்போது சந்தையில் கிடைக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளில் , ஈஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கு மட்டுமே வரி விலக்கு கிடைக்கிறது.
ஆனால் ஈஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரை, லாக் இன் காலம் மூன்று ஆண்டுகள். அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முதலீட்டை தொடர்ந்தால் மட்டுமே வரி விலக்கு கிடைக்கும். எனவே 80சி பிரிவில் முதலீட்டுக்கு வரி விலக்கு கோருவோர் இத்தகைய ஃபண்டுகளில் முதலீடு செய்கின்றனர். வரி சேமிப்புக்கான நிலையான வைப்புத்தொகை திட்டங்கள் கூட கிடைக்கின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications