டீசல் மற்றும் கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை மத்திய அரசு திங்கள்கிழமை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை ஒரு டன்னுக்கு 5,000 ரூபாயில் இருந்து 1,300 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் டீசல் மீதான விண்ட்ஃபால் வரியை லிட்டருக்கு ரூ.1ல் இருந்து ரூ.0.5ஆக குறைத்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமான எரிபொருள் மீதான விண்ட்ஃபால் வரி பூஜ்ஜியத்தில் இருந்து லிட்டருக்கு 1 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஜூலை 2022 இல் கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது விண்ட்ஃபால் வரியை விதித்தது, இதன் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு, ஏற்றுமதியை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விண்ட்ஃபால் வரி விதிக்கப்படுவதன் மூலம் இந்தியாவில் இருக்கும் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள், தங்களுடைய ஏற்றுமதியை குறைத்து உள்நாட்டில் விற்பனையை அதிகரிக்கும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், சிறிய அளவிலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது.
மேலும் இந்த விண்ட்ஃபால் வரி நேரடியாக பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படுவதால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும். தற்போது வரி குறைக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கூடுதல் லாபத்தில் எரிபொருள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரஷ்யாவின் ராஸ்நெப்ட் முதலீட்டில் இயங்கும் நைரா எனர்ஜி ஆகியவை இந்தியாவில் எரிபொருள் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களாகும். மேலும் விமான எரிபொருள் மீதான வரி உயர்த்தப்பட்டு உள்ளதால் இதில் கிடைக்கும் லாபம் பாதிக்கப்படும். இந்த வரியால் உள்நாட்டில் விற்கப்படும் எரிபொருளுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.


Click it and Unblock the Notifications