இந்தியா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பிலும், டீசல் ஏற்றுமதியிலும் பெரும் பங்கு வகிக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குச் சாதகமாக மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்கா முதல் ஐரோப்பா வரையில் உலகம் முழுவதும் டீசல் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் வேளையில் இறக்குமதி செய்யப்படும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் வேளையில், இந்திய அரசு 15 நாளுக்கு ஒரு முறை எரிபொருள் ஏற்றுமதியில் இருக்கும் லாப அளவீடுகளுக்கு ஏற்ப மாற்றப்படும் விண்ட்ஃபால் வரியில் மத்திய அரசு புதிய திருத்தம் செய்துள்ளது.

இதன் அடிப்படையில் மத்திய அரசு பெட்ரோல் ஏற்றுமதி மீதான விண்ட்ஃபால் வரியை ஒரு லிட்டருக்கு 0.5 ரூபாயில் இருந்து 2.5 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் தற்போது உலக நாடுகளில் முக்கிய தேவையாக இருக்கும் 'டீசல்' ஏற்றுமதி மீதான விண்ட்ஃபால் வரி ஒரு லிட்டருக்கு 16 ரூபாயில் இருந்து 8.5 ரூபாயாகக் குறைக்கப்பட்டு உள்ளதாகவும், அக்டோபர் 16ஆம் தேதி முதல் புதிய வரி நடைமுறைக்கு வரும் என மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி அமைப்பு அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாசம் ஏஞ்சல்ஓன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய எரிபொருள் ஏற்றுமதி சந்தையில் 75 சதவீதம் பங்கீட்டை தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கொண்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. 75 சதவீதம் என்பது கிட்டத்தட்ட ஒரு மோனோபோலி போன்றது.
குஜராத்தில் இருக்கும் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து ஐரோப்பா, அமெரிக்கா, பிரேசில், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ரிலையன்ஸ் ஏற்றுமதி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் விமான எரிபொருள் மீதான வரியில் எவ்விதமான மாற்றத்தையும் மத்திய அரசு கொண்டு வரவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு கொடுத்த விளக்கத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் மீதான விலை ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்தியும், டீசல் மீதான ஏற்றுமதி வரியைக் குறைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
புதிய வரியின் கீழ் பெட்ரோல் மீதான ஏற்றுமதி என்பது 5 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. டீசல் மீதான வரி லிட்டருக்கு 7.5 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. டீசல் மீதான வரி குறைப்பு ரிலையன்ஸ்-க்கு ஜாக்பாட் ஆக மாறக்கூடும்.
இந்தியாவில் விண்ட்ஃபால் வரி என்பது 2022 ஜூலை மாதம் தான் முதல் முறையாக அறிமுகமானது, அப்போது கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது மூலம் பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் பொருட்களை அதிக விலைக்கு வெளிநாட்டில் விற்பனை செய்ய முடிவு செய்தது. இந்த அதீத லாபத்தில் அரசு பலன் அடையும் விதமாக இந்த விண்ட்ஃபால் வரி கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசு கச்சா எண்ணெய் விலை சரிவடைய துவங்கிய வேளையில் 2 வருடத்திற்குப் பின்பு இவ்வரியை திரும்பப் பெற்றது, ஆனால் ஈரான் போருக்கு வெடித்த பின்பு மார்ச் 2026ல் மீண்டும் நடைமுறைப்படுத்தியது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 105.5 டாலருக்கும், WTI கச்சா எண்ணெய் 97.41 டாலருக்கும் வர்த்தகமாகி வருகிறது.
இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு சுமார் 85 பில்லியன் டாலர் மதிப்பிலான பெட்ரோலியம் பொருட்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதிக்காகவும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும் 23 சுத்திகரிப்பு ஆலை இந்தியாவில் இயங்கி வருகிறது.
இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலியம் பொருள் என்றால் டீசல் தான், ஏப்ரல் - ஆகஸ்ட் மாதம் வரையிலான 4 மாதங்களில் 1627 மெட்ரிக் டன், 1484 மெட்ரிக் டன், 1339 மெட்ரிக் டன், 2438 மெட்ரிக் டன், 2089 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய அரசின் PPAC அமைப்பின் தரவுகள் கூறுகிறது.
டீசலுக்கு பின்பு தான் மோட்டார் ஸ்பிரிட் என்ற கேசோலின் வருகிறது, இதே காலகட்டத்தில் 887 மெட்ரிக் டன், 910 மெட்ரிக் டன், 974 மெட்ரிக் டன், 1348 மெட்ரிக் டன், 1304 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா உலகின் 2வது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுவனமாக இருந்தாலும், கடல் வழியாக அனுப்பும் டீசல் ஏற்றுமதியில் உலக வர்த்தகத்தில் 10 சதவீத பங்கீட்டை இந்தியா கொண்டு உள்ளது. உலகில் பல நாடுகள் பைப்லைன் வழியாக டீசல் ஏற்றுமதி செய்கிறது.
இப்படி இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் டீசலில் பெரும் பங்கு வகிப்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இதேவேளையில் இந்தியாவில் வேறு எந்த நிறுவனத்திற்கும் இல்லாத சலுகை முகேஷ் அம்பானிக்கு உள்ளது. அமெரிக்க அரசு வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு சிறப்பு அனுமதி கொடுத்துள்ளது.
ஜூலை மாதம் மட்டும் ரிலையன்ஸ் ஜாம்நகரில் இருந்து ஐரோப்பாவுக்கு மட்டும் 4 - 5 மில்லியன் பேரல் பெட்ரோலியம் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 10 மாத உயர்வை எட்டியுள்ளதாக கெப்லர், வோர்டெக்ஸ் ஆகியவற்றின் தரவுகள் அடிப்படையாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications

