நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ செவ்வாய்கிழமையன்று தனது ஜூன் மாத காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் பெரியளவில் மாற்றம் இல்லாமல், 2,390 கோடி ரூபாயாக லாபம் கண்டுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 2,388 கோடி ரூபாயாக இருந்தது.
இதே இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 14,913 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 14,716 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விப்ரோவின் வருவாய்
இதே விப்ரோவின் ஐடி சேவைகளின் வருவாய் இந்த ஜூன் காலாண்டில் 14,596 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 14,351 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதே இந்த நிறுவனத்தின் ஐடி சேவைகளின் EBIT margin ஆனது 19.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 17.6 சதவீதமாக இருந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 18.4 சதவீதமாகவும் இருந்துள்ளது.
புதிய வாடிக்கையாளர்கள்
இதே இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டினை போலவே தான் கிட்டதட்ட உள்ளது. இது 15,571.4 கோடி ரூபாயாகவும், இதே முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் 15,566.6 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், இந்த ரணகளமான காலாண்டிலும் விப்ரோ நிறுவனம் 42 புதிய கஷ்டமர்களை சேர்த்துள்ளது தான்.
ஐடி தேவை குறையலாம்
கொரோனாவின் காரணமாக ஐடி துறையின் சேவையானது குறையலாம். ஏனெனில் நிறுவனங்கள் செலவினைக் குறைக்கும் பொருட்டு ஐடி துறைக்காக செலவிடும் தொகையினை கணிசமாக குறைக்கலாம் என்றும் விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் வரும் காலத்தில் ஐடி துறைக்கான தேவை மோசமாக பாதிக்கலாம் என்றும் விப்ரோ தெரிவித்துள்ளது. இதனால் எங்களது பொருட்களை வாங்குவது பாதிக்கப்படலாம். அல்லது தாமதமாகலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பிரேசில் நிறுவனத்தினை கையகப்படுத்தும் விப்ரோ
எனினும் பிரேசில் நாட்டை சேர்ந்த IVIA Servicos de Informatica Ltda 22.4 மில்லியன் முதலீடு செய்து கையகப்படுத்த உள்ளதாகவும் விப்ரோ தெரிவித்துள்ளது. இந்த அதிரடியான திட்டமானது செப்டம்பர் இறுதியில் முடிவடையலாம் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் இதற்கெல்லாம் செவிசாய்க்காதவாறு இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது, இன்றைய சந்தை முடிவில் 1 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 225.30 ரூபாயாக காணப்படுகிறது.
கொரோனாவால் பணி நீக்கம் இல்லை
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் தலைவர் ரிஸாத் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத்தில், கொரோனாவினை காரணம் காட்டி எந்தவொரு ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்படவில்லை. இனி அப்படி ஒரு திட்டமும் இல்லை கடந்த திங்கட்கிழமையன்று தெரிவித்திருந்தாகவும் விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications