பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோவின் நிறுவனரும், தலைவருமான அசிம் பிரேம்ஜி மற்றும் மணிப்பால் குரூப்பின் ரஞ்சன் பாயின் குடும்ப அலுவலகங்களான பிரேம்ஜி இன்வெஸ்ட் மற்றும் கிளேபாண்ட் கேபிடல் ஆகியவை இணைந்து, இந்தியாவின் புதிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான அகசா ஏர்-ல் சிறிய அளவிலான பங்குகளை வாங்க சுமார் $125 மில்லியன் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருவாய் சமீபத்தில் பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்து வந்தாலும், அசிம் பிரேம்ஜி தனது சொந்த முதலீட்டு நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட் மூலம் தொடர்ந்து பல துறையைச் சேர்ந்த நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டு ஏஐ நிறுவனத்தில் முதலீடு செய்தார் அசிம் பிரேம்ஜி.

இந்த நிலையில் இந்தியாவில் விமான பயணிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் வேளையில் அசிம் பிரேம்ஜி இந்த இத்துறையில் இறங்க முடிவு செய்துள்ளார். இதற்காக பிரேம்ஜி இன்வெஸ்ட் மற்றும் கிளேபாண்ட் கேபிடல் கூட்டணி, பிரபல கன்சல்டிங் நிறுவனமான அல்வாரெஸ் & மார்சல் உடன் இணைந்து இந்த முதலீட்டுக்கான ஆய்வை நடத்தி வருகிறது.
பிரேம்ஜி இன்வெஸ்ட் மற்றும் கிளேபாண்ட் கேபிடல் கூட்டணி அகசா ஏர் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இந்த முதலீட்டை விரிவாக்கத்தை மேம்படுத்துவதற்கும், விமானங்களுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்தவும் பயன்படுத்தப்படும்.
அகசா ஏர் நிறுவனத்தில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா குடும்பமும், இதன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான வினய் டுபே இணைந்து சுமார் 65% க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கின்றனர். தற்போது பிரேம்ஜி இன்வெஸ்ட் மற்றும் கிளேபாண்ட் கேபிடல் கூட்டணி முதலீடு செய்தால் இவர்களின் பங்கு இருப்பு குறைய வாய்ப்புள்ளது.
தற்போது சுமார் 40% பங்கு வைத்திருக்கும் ஜூன்ஜூன்வாலா குடும்பம், மிகப்பெரிய பங்குதாரராக அகசா ஏர் நிறுவனத்தில் உள்ளனர். மேலும் அகசா ஏர் சிஇஓ டுபே இந்த முதலீடு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், ஆனால் நிறுவனம் எப்போதும் சிறப்பான மூலதனம் கொண்டதாக இருக்க முயற்சிக்கும் என்று கூறினார். "எங்களிடம் தற்போது உள்ள பணத்தின் அளவு, ஆரம்பத்தில் செய்யப்பட்ட முதலீட்டை விட அதிகமாக இருப்பு உள்ளது" என்று டுபே கூறியுள்ளார்.
இந்திய விமான போக்குவரத்துத் துறையில் கோ ஃபர்ஸ்ட் திவாலாகியும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தவித்து வரும் வேளையில், ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் எண்ணிக்கை கொரோனாவுக்கு முன்பு 98 ஆக இருந்த நிலையில் தற்போது வெறும் 22 ஆக குறைந்துள்ளது.
இப்படியிருக்கும் போது இந்தியச் சந்தையில் தற்போது ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ மட்டுமே மொத்த வர்த்தக சந்தையையும் பங்குபோட்டுக்கொள்ளும் வேளையில் அகசா ஏர் போன்ற புதிய நிறுவனங்கள் முறையாக திட்டமிட்டால் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற முடியும்.


Click it and Unblock the Notifications