பெங்களூரு: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தற்போது வொர்க் லைஃப் பேலன்ஸ் (Work life balance) எனப்படும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலைக்கு இடையே சமநிலை பேணுவதன் முக்கியத்துவம் குறித்து பலரும் பேசி வருகின்றனர். இளம்பெண் ஒருவர் பணிச்சுமை காரணமாக உயிரிழந்தது உள்ளிட்ட சம்பவங்களால் பணிக்கு செல்லும் பலரும் தனிப்பட்ட வாழ்க்கை மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
அந்த வகையில் விப்ரோ நிறுவனத்தின் தலைவரான ரிஷத் பிரேம்ஜி வொர்க் லைஃப் பேலன்ஸ் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தி எக்னாமிக்ஸ் டைம்ஸுக்கு பேட்டி அளித்திருக்கும் ரிஷத் பிரேம்ஜி கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்னரே தனக்கு வொர்க் லைஃப் பேலன்ஸ் எவ்வளவு முக்கியமானது என்பது தெரிய வந்ததாக கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு பெங்களூரு டெக் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ரிஷத் பிரேம்ஜி வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே எல்லையை வகுத்துக் கொள்வது அவசியம் எனக் கூறியுள்ளார்.
வொர்க் லைஃப் பேலன்ஸ் என்பதை தனி நபர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், ஒருபோதும் நிறுவனம் உங்களுக்காக அதைப்பற்றி யோசிக்காது என்றும் தெரிவித்துள்ளார் . அண்மையில் தான் இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி தற்போது உள்ள இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் அதுதான் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என தெரிவித்திருந்தார் . மேலும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்ற வொர்க் லைஃப் பேலன்ஸ் என்ற கருத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என அவர் கூறினார்.
இந்த நிலையில் விப்ரோ நிறுவனத்தின் தலைவரான ரிஷத் பிரேம்ஜி அதற்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் வொர்க் லைஃப் பேலன்ஸ் என்பது வேறு மாதிரியாக இருந்தது, ஆனால் தற்போது அந்த கருத்தாக்கமே முற்றிலும் மாறிவிட்டது எனக் கூறியுள்ளார். வேலை செய்யும்போதே தனக்கு பிடித்தமான விஷயங்களையும் செய்ய அனுமதிப்பதுதான் என அவர் கூறுகிறார்.
மேலும் இதனை ஹைபிரிட் வேலை முறையும் மூலம் நம்மால் எளிதாக எட்டி விட முடியும் என தெரிவித்துள்ளார். அதாவது வாரத்தின் சில நாட்கள் அலுவலகத்திலும் வாரத்தின் சில நாட்கள் வீட்டிலிருக்கும் வேலை செய்வதன் மூலம் எளிதாக கொண்டுவர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தான் டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் முழுக்க முழுக்க அலுவலகத்தில் வந்து மட்டுமே பணிபுரிய வேண்டும் என அறிவித்தன. ஆனால் விப்ரோ தலைவர் தொடர்ந்து தங்கள் நிறுவனத்தில் ஹைபிரிட் முறை வேலையே தொடரும் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications