விப்ரோ என்றாலே நம் நினைவுக்கு வருவது இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனம், பல லட்சம் பேரும் பணியாற்றும் பெரிய நிறுவனம், ஆசிம் பிரேம்ஜி-யின் நன்கொடைகள் போன்றவை தான். ஆனால் விப்ரோ குழுமத்தின் பிற முக்கியமான வர்த்தக பிரிவுகளும் உள்ளது. கடந்த சில வருடமாக விப்ரோ கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்டிங் நிறுவனம் அதிகப்படியான முதலீட்டையும் வேகமாக விரிவாக்கத்தையும் செய்து வருகிறது.
இந்த நிலையில் விப்ரோ கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்டிங் நிறுவனம் கேரளாவில் பிரபலமான பிராண்டாக இருக்கும் Brahmins என்ற நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது. Brahmins என்ற நிறுவனம் கேரள மாநிலத்தில் மசாலா பொருட்கள் மற்றும் ரெடி டு குக் பிரிவு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

விப்ரோ நிறுவனம் கடந்த ஆண்டு உணவு மற்றும் உணவு பொருட்கள் வர்த்தகத்தில் இறங்குவதாக அறிவித்தது. இப்புதிய முயற்சியின் மூலம் விப்ரோ ஸ்னாக்ஸ், மசாலா பொருட்கள், ரெடி டூ குக் பொருட்கள் பிரிவில் நாட்டின் முன்னணி பிராண்டாக வர உயர வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இத்துறையில் ஏற்கனவே ஐடிசி கொடிக்கட்டி பறக்கும் வேளையில் சமீபத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டீரீஸ் FMCG பிரிவில் பல பொருட்களை 30- 35 சதவீதம் வரையில் குறைவான விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இதனால் FMCG பிரிவில் போட்டி அதிகரித்து காணப்படும் இந்த சூழ்நிலையில் விப்ரோ நிறுவனம் களத்தில் அதிரடியாக செயல்பட்டு வருகிறது.
விப்ரோ கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்டிங் நிறுவனம் கடந்த ஆண்டு இதே கேரள மாநிலத்தை சேர்ந்த Nirapara என்னும் கேரளாவின் முக்கிய உணவுகளை ரெடி டூ குக், ரெடி டூ மிக்ஸ் பிரிவில் விற்பரனை செய்து வருகிறது. இந்த Nirapara நிறுவனத்தை வாங்க விப்ரோ ஒப்பந்தம் செய்ததை தொடர்ந்து தற்போது Brahmins என்னும் நிறுவனத்தை வாங்கியுள்ளது. இது விப்ரோ கன்ஸ்யூமர் பிரிவின் 15வது நிறுவன கைப்பற்றலாகும்.
1987 ஆம் ஆண்டு கேரளாவில் Brahmins நிறுவனம் துவங்கப்பட்டு முன்பே கலக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும் மசாலா பொருட்கள், முன்பே கலக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும் பவுடர்கள், ஊறுகாய், டெசர்ட் மிக்ஸ் என பல ரெடி டூ குக், ரெடி டூ மிக்ஸ் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
கடந்த ஆண்டு இதே பிரிவுக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக Badshah masala நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை டாபர் வாங்கியது. இதேபோல் ஐடிசி நிறுவனம் Sunrise Foods நிறுவனத்தை மொத்தமாக 2150 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்தியாவில் மசாலா பொருட்களுக்கு மிகப்பெரிய சந்தை இருக்கும் வேளையில் ரெடி டூ குக், ரெடி டூ மிக்ஸ் பிரிவுக்கு பெரு நகரங்களில் மிகப்பெரிய சந்தை உருவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications