இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ-வின் தலைமைச் செயல் அதிகாரியான அமித் சௌத்ரி பதவி விலக உள்ளதாக அறிவித்துள்ளது மட்டும் அல்லாமல் விப்ரோ நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அமித் சௌத்ரி தனது சொந்த விருப்பத்தின் பெயரிலும், நிறுவனத்திற்கு வெளியே வேறு வாய்ப்புகளைத் தேடுவதற்காகப் பதவியை ராஜினாமா செய்த நிலையில், இவரது ராஜினாமாவை நிர்வாகம் ஏற்றுக்கொண்ட நிலையில் மே 31ம் தேதி அவரது கடைசி பணி நாள் என்று விப்ரோ பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் சௌத்ரி ராஜினாமாவைத் தொடர்ந்து இப்பதவியில் சஞ்சீவ் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தான் இனி விப்ரோ நிறுவனத்தின் சிஓஓ. இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களில் சிஓஓ என்ற பணியிடத்தையே நீக்கப்பட்டு வரும் வேளையில், விப்ரோ தொடர்ந்து இப்பதவியைத் தக்க வைத்துள்ளது மட்டும் அல்லாமல் பதவியை நீக்க வாய்ப்பு கிடைத்தும் புதிய அதிகாரியை நியமித்துள்ளது.
அமித் சௌத்ரி ராஜினாமா செய்வது, சமீப காலத்தில் விப்ரோ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள இரண்டாவது முக்கிய அதிகாரியின் பதவி விலகல் ஆகும். இதற்கு முன்னதாக, மே 10ம் தேதி APMEA பிராந்திய தலைவராக இருந்த Anis Chenchah ராஜினாமா செய்தார்.
இந்த இரண்டு முக்கிய தலைவர்களின் பதவி விலகல்களும், முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி தியரி டெலபோர்ட்டே கடந்த ஏப்ரல் 6ம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடக்கிறது குறிப்பிடத்தக்கது. அமித் சௌத்ரி, அனீஸ் சென்சாஹ் மற்றும் தியரி டெலபோர்ட்டே ஆகிய மூவரும் பிரான்ஸ் தலைமையகத்தைக் கொண்ட கேப்ஜெமினி நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்பது முக்கியமான தகவலாகும்.
தியரி டெலபோர்ட்டே தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தபோதுதான், சென்சா மற்றும் சௌத்ரி ஆகியோர் விப்ரோ நிறுவனத்தில் சேர்ந்தனர். தற்போது தியரி டெலாபோர்டே வெளியேறியதும், இவர்களும் வெளியேற முடிவு செய்துள்ளனர். இது விப்ரோ உயர்மட்ட நிர்வாகத்திற்கு முக்கிய பாதிப்பாகவே இருக்கும்.
இதற்கிடையில், புதிய சிஓஓ ஆக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் ஜெயின், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீநிவாஸ் பல்லியாவுக்கு நேரடியாக ரிப்போர்ட் செய்வார். மேலும், அவர் விப்ரோ நிர்வாகக் குழு உறுப்பினராகவும் தொடர்வார் என விப்ரோ நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2023ம் ஆண்டில் உலகளாவிய வணிக நடவடிக்கைகளின் தலைவராக விப்ரோ நிறுவனத்தில் சேர்ந்த சஞ்சீவ் ஜெயின்-க்கு, பெரிய மற்றும் பல்வகைப்பட்ட குழுக்களை வழிநடத்துவதிலும், உலகளாவிய நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதிலும் 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் உள்ளது.
விப்ரோ நிறுவனத்தில் சேர்ந்த நாள் முதல், சஞ்சீவ் ஜெயின், விப்ரோவின் talent supply chain பிரிவைக் கவனித்து வருகிறார். விப்ரோவின் AI பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு உத்தியை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. சஞ்சீவ் ஜெயின் விப்ரோ நிறுவனத்தில் சேர்வதற்கு முன்னதாக Kyndryl Holdings, IBM, காக்னிசென்ட், GE ஆகிய நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications