சென்னை: இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன் வரை) தனது ஊழியர் எண்ணிக்கையில் மிக சொற்ப அளவிலான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. ஆனாலும் விப்ரோ நிறுவனத்தில் தொடர்ந்து குறைந்து வந்த ஊழியர்கள் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது. டிசிஎஸ், ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்களிலும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள வேளையில் இன்போசிஸ்-ல் மட்டும் குறைந்துள்ளது,
கடந்த மார்ச் மாத இறுதியில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 234,054 ஆக இருந்த நிலையில், ஜூன் மாத இறுதியில் இந்த எண்ணிக்கை வெறும் 337 பேர் மட்டுமே அதிகரித்து 234,391 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ஜூன் காலாண்டில் 92 நாளில் ஒரு நாளுக்கு 3 பேரை மட்டுமே சேர்த்துள்ளது ஸ்ரீனிவாஸ் பல்லியா நிர்வாகம்.

இதற்கு முந்தைய ஆறு காலாண்டுகளில் தொடர்ச்சியாக ஊழியர் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ஜூன் காலாண்டில் இச்சரிவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
விப்ரோவின் முக்கிய போட்டியாளரும் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஜூன் காலாண்டில் 5,452 புதிய ஊழியர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம், ஜூன் மாத இறுதியில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 606,998 ஆக உயர்ந்துள்ளது.
இதே காலகட்டத்தில், விப்ரோவின் மற்ற போட்டியாளர்களான இன்ஃபோசிஸ் மற்றும் எச்.சி.எல் டெக் ஆகிய நிறுவனங்கள் முறையே 1908 மற்றும் 8080 ஊழியர்களைக் குறைத்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஆறு காலாண்டுகளாகத் தொடர்ச்சியாக ஊழியர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மேலும் விப்ரோ நிறுவனத்தின் ஊழியர் வெளியேற்பு விகிதமான அட்ரிஷன் ரேட் முந்தைய காலாண்டின் 14.2 சதவீத அளவில் இருந்து சிறிய அளவில் குறைந்து தற்போது 14.1% ஆக உள்ளது. மேலும், நிறுவனத்தின் பணியாளர் பயன்பாட்டு விகிதம் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 86.9% ஆக இருந்த நிலையில், இந்த காலாண்டில் 87.7% ஆக அதிகரித்துள்ளது.
ஜூன் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ.3,003 கோடியை பெற்றுள்ளதாக நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.22,831 கோடியாக இருந்த வருவாய், இந்த காலாண்டில் ரூ.21,964 கோடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் விப்ரோ வருவாயில் 4% சரிவைப் பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications