சென்னை: இந்திய ஐடி சேவைத் துறையின் 4வது பெரிய நிறுவனமாக விளங்கும் விப்ரோ-வில் புதிய சிஇஓ ஸ்ரீனிவாஸ் பல்லியா தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும், இவருடைய நியமனத்திற்குப் பின்பு விப்ரோ-வில் மூத்த அதிகாரிகள் தொடர்ந்து வெளியேறுவது தொடர்கதையாகிவிட்டது. அதிலும் குறிப்பாக முன்னாள் சிஇஓ தியரி டெலாபோர்ட்டே வெளியேறியதற்குப் பின்பு இவரின் தலைமையில் கீழ் சேர்ந்தவர்கள் தற்போது வெளியேறி வருகின்றனர்.
விப்ரோ போன்ற பெரிய டெக் நிறுவனங்களில் மூத்த அதிகாரிகள் வெளியேறுவது என்பது அதன் வர்த்தக வளர்ச்சிக்கும், வர்த்தக நிலைப்பாட்டிற்கும் பெரும் பிரச்சனையாகும். இந்த நிலையில் விப்ரோ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான (CTO) சுபா தத்தவர்த்தி ஆகஸ்ட் 16 முதல் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு முன்னாள் சிஇஓ தியரி டெலபோர்ட்டின் கீழ் விப்ரோவில் சேர்ந்த சுபா தத்தவர்த்தி, சான் பிரான்சிஸ்கோ பே ஏரியாவில் இருந்து விப்ரோ நிறுவனத்தின் பணிகளை நிர்வாகம் செய்து வந்தார். இந்த நிலையில் விப்ரோ வெளியிட்ட அறிக்கையில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான (CTO) சுபா தத்தவர்த்தி நிறுவனத்திற்கு வெளியே புதிய வேலைவாய்ப்பில் சேர முடிவு செய்துள்ளார். எனவே விப்ரோ-வில் இவரின் பதவிக் காலம் ஆகஸ்ட் 16 முதல் முடிவுக்கு வருகிறது என தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் புதிய சிஇஓ-வாக பொறுப்பேற்ற ஸ்ரீனி பல்லியாவுக்கு பிறகு, டெலபோர்ட் காலத்தில் பணியாற்றிய நான்கு முக்கிய அதிகாரிகள் பதவி விலகியுள்ளனர். இதில் சமீபத்தில் தலைமை டெலிவரி அதிகாரியாக இருந்த அஜித் மஹாலே பதவி விலகினார்.
இதற்கு முன்பு மே மாதம், முன்னாள் தலைமை செயல்பாட்டு அதிகாரியான அமித் சௌத்ரி மற்றும் ஏபிஎம்இஏ (ஆசியா பசிபிக், இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா) சந்தை தலைமை நிர்வாக அதிகாரி அனீஸ் சென்சா ஆகியோர் பதவி விலகினர்.
அசிம் பிரேம்ஜி மற்றும் ரிஷாத் பிரேம்ஜி தலைமையிலான விப்ரோ நிறுவனத்தில், ஸ்ரீனிவாஸ் பல்லியாவின் கீழ் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. டெலபோர்ட்டின் பதவிக்காலம் முடிவடைவதற்கு 15 மாதங்களுக்கு முன்பே அவர் பதவி விலகியது மட்டும் அல்லாமல் விப்ரோ -வை வளர்ச்சிப் பாதைக்குத் திருப்ப முடியாத காரணத்தால் பல விமர்சனங்களுக்கு இடையில் வெளியேற்றப்பட்டார்.
தியரி டெலாபோர்ட்டே நிர்வாகத்திலும் பல உயர் அதிகாரிகள் வெளியேறிய நிலையில், தற்போது ஸ்ரீனிவாஸ் பல்லியா தலைமையின் கீழும் அதிகப்படியான உயர் அதிகாரிகள் வெளியேறுவது தொடர்கிறது. இது விப்ரோ ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications