இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ நிறுவனத்தில் அடுத்தடுத்து அதிரடிகளால் கடந்த சில மாதங்களாக மொத்த ஐடி ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதலில் மூத்த அதிகாரிகள் வெளியேற்றம், அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு, CAPCO நிறுவனத்தில் பணிநீக்கம், பின்பு சிஇஓ மாற்றம், மோசமான காலாண்டு முடிவுகள் என அடுத்தடுத்து விப்ரோ ஊழியர்களைப் பீதியிலேயே வைத்திருந்தது.

இந்த நிலையில் விப்ரோ பங்குச்சந்தையில் பழைய சிஇஓ சம்பள விபரத்தையும், புதிய சிஇஓ சம்பள விபரத்தையும் சமர்ப்பித்தது. இதில் புதிய சிஇஓ ஸ்ரீனிவாஸ் பல்லியா-வுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கான அதிகபட்ச ஊதியமாக 7 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுமார் 4 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் அளிக்கப்பட்டு உள்ளது. இது நிறுவனத்தின் இலக்குகளை அடைவதன் மூலம் அதிகரிக்கவும் செய்யலாம், அதேவேளையில் குறையவும் செய்யலாம்.
இதற்கிடையில் விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான தியரி டெலபோர்ட்டுக்கு, 4.33 மில்லியன் டாலர் ரொக்கக் பணம் மற்றும் தேவையான சமூக பாதுகாப்பு பங்களிப்பு வழங்கப்படும் என்றும் விப்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தியரி டெலபோர்ட்டே தனது சிஇஓ பதவியில் இருந்து வெளியேறிய நிலையில் கடந்த ஆண்டு அவர் பதவியில் இருந்த காலம் வரையில் சம்பளம் அளிக்கப்பட வேண்டும். இதற்காக 4.33 மில்லியன் டாலர் அதாவது 35 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளார். மார்ச் மாத துவக்கத்தில் தான் தியரி டெலபோர்ட்டே தனது ராஜினாமா-வை அறிவித்தார்.
இக்காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட 4.33 மில்லியன் டாலர் சம்பளத்தில் தேவையான பிடித்தங்கள் கழிக்கப்பட்ட பின்னர் சம்பள தொகை வழங்கப்படும் என்றும் விப்ரோ சமர்ப்பிக்கப்பட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில், தியரி டெலபோர்ட்டே தனது பெயரில் இருந்த விப்ரோ பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்துள்ளார். தியரி டெலபோர்ட்டே சுமார் ரூ.21.4 கோடி மதிப்புள்ள 4,72,292 பங்குகளை விற்பனை செய்துள்ளதாக, பங்குச் சந்தையின் மற்றொரு அறிக்கையை விப்ரோ சமர்ப்பித்துள்ளது.
இதன் மூலம் விப்ரோ-வை தியரி டெலபோர்ட்டே மொத்தமாக கை கழுவினாலும் சுமார் 56 கோடி ரூபாய் என கைநிறைய பணத்துடன் ஜாலியாக பாரீஸ்-க்கு பறக்கிறார்.


Click it and Unblock the Notifications