2024-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் அதிகம் பேசப்பட்ட ஒரு நகரம் என்றால் அது பெங்களூர் தான், வருடத்தின் துவக்கத்திலேயே தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடியது, இதன் பின்பு ராமேஸ்வரம் கஃபே வெடி விபத்து, இப்போது வெயிலின் கோரதாண்டவம் என அடுத்தடுத்த பிரச்சனைகளால் பெங்களூர் முக்கிய பேசுபொருளாகவே இருந்தது.
பெங்களூரில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை உச்சத்திலிருந்த போது பெங்களூர் நகர நிர்வாக அமைப்பு இப்பிரச்சனையைச் சமாளிக்க அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரைச் சுத்திகரித்து உணவு, விவசாயம் அல்லாத பணிகளுக்குப் பயன்படுத்த முடிவு செய்தது.

பெங்களூர் மாநகர மக்கள் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வரும் நிலையில், காவிரி நீரை பயன்படுத்துவதை மிச்சப்படுத்தும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது பெங்களூர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் கையாளும் வாரியம் (BWSSB).
மே 2 முதல், தினசரி 3 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட, பாக்டீரியா இல்லாத கழிவுநீரை தொழில்நுட்ப பெரு நிறுவனமான விப்ரோ நிறுவனத்திற்கு வழங்க BWSSB தொடங்கியுள்ளது. இந்த நீரை விப்ரோ சுத்திகரிக்கவும், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சவும், இதர பணிகளுக்கும் பயன்படுத்த உள்ளது.
இதுகுறித்து BWSSB தலைவர் டாக்டர் வி.ராம் பிரசாத் மனோகர் கூறுகையில், "அடோப், RMZ எகோ வேர்ல்ட் மற்றும் HAL உட்பட 40 ஐடி பார்க்குகள், நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட நீர் தேவை என கோரிக்கை வைத்துள்ளனர்" என தெரிவித்தார்
மேலும் அவர், 40 ஐடி பார்க்குகள் மற்றும் நிறுவனங்கள் இந்த சுத்திகரிக்கப்பட்ட நீரை, சுத்தம் செய்வதற்காகவும், ஏர் கண்டிஷனரில் பயன்படுத்த, இதர பணிகளுக்காகப் பயன்படுத்தக் கோருகின்றனர். ஆக்ரா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, தினசரி 3 லட்சம் லிட்டர் தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் விப்ரோ நிறுவனத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது." என்றும் தெரிவித்தார்.
"சுத்திகரிக்கப்பட்ட நீருக்கான தேவை அதிகரித்து வருவதால், தற்போது காவிரி நீரை மிச்சப்படுத்தி, பிற முக்கிய இடங்களுக்கு சப்ளை செய்ய முடியும். நிலத்தடி நீரை நம்பியிருக்கும் நிலை குறையும், மேலும் இந்த சுத்திகரிக்கப்பட்ட நீர் மூலம் ஐடி நிறுவனங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய BWSSB தயாராக உள்ளது" என்று மேலும் கூறினார்.
மேலும், IISc உடன் இணைந்து BWSSB மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் (ஆகாரா, கே.சி. வேலி மற்றும் பெல்லந்தூர்) பாக்டீரியா இல்லாத சுத்திகரிக்கப்பட்ட நீரை உருவாக்கும் சொந்த தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தியுள்ளது.
"பெங்களூரில், தினசரி சுமார் 1,440 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உருவாகிறது. 1,212 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட 33 சுத்திகரிப்பு நிலையங்களை BWSSB இயக்குகிறது.
கோரமங்கலா-சல்லகட்டா வேலி-க்கு 308 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்குகிறது, பெல்லந்தூர் 90 மில்லியன் லிட்டர் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்குகிறது, சுமார் 370 மில்லியன் லிட்டர் கோலார் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்ப பயன்படுத்தப்படுகிறது" என்று அவர் விளக்கினார்.
இந்த புதிய முயற்சி, பெங்களூரின் நீர் தேவையை நிவர்த்தி செய்வதோடு சுற்றுச்சூழலுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications