இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ, ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) நிறுவனத்துடன் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களின் நவீனமயமாக்கும் பணிகளை விப்ரோ நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. எதிஹாடின் பணியிடங்கள், அதன் நெட்வொர்க் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு , சேவை மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை தங்கள் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக விப்ரோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐந்து ஆண்டு காலத்திற்கு இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிஹாட் நிறுவனத்திற்கு தேவையான நிகழ் நேர கிளவுட் உள்கட்டமைப்புகளையும் சேவைகளையும் விப்ரோ நிறுவனம் செய்து தர இருக்கிறது. இது இந்த விமான சேவை நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை இன்னும் வேகப்படுத்தும் என இரண்டு நிறுவனங்களுமே நம்பிக்கை தெரிவித்துள்ளன.
டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளில் விப்ரோ நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது , இதனால் தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஒப்பந்தத்தை தங்களிடம் ஒப்படைத்து இருக்கிறது என விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வினய் தெரிவித்துள்ளார் .
விப்ரோ நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைத்திருக்கும் புத்தாய்வு ஆய்வகத்தையும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் யுகத்தில் நாம் காலடி எடுத்து வைத்திருக்கிறோம், இந்த நேரத்தில் விமான போக்குவரத்து சேவையிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளது.
எனவே தான் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களை கொண்டு வர இருக்கிறோம் என எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை டிஜிட்டல் அதிகாரி பிராங்க் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தான் விப்ரோ நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இதன்படி அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 3, 353 கோடி ரூபாய் என இருக்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 24 சதவீதம் அதிகமாகும்.


Click it and Unblock the Notifications