இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை துறையில் 4வது பெரிய நிறுவனமாக இருக்கும் விப்ரோ-வுக்கு புதிய சிஇஓ ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்ட சில வாரத்திலேயே பிரபலமான நிறுவனத்தில் இருந்து முக்கியமான ஒப்பந்தம் பெறப்பட்டு உள்ளது.
இதன் மூலம் விப்ரோ-வின் பாதை புதிய நிதியாண்டில் புதிய வேகத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. விப்ரோ நிறுவனம் பிரபல டெலிகாம் நிறுவனமான நோக்கியா உடன் பல மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை செய்துள்ளது என்று ஏப்ரல் 30 ஆம் தேதி பங்குச் சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் ஊழியர் சேவை தளத்தை (Employee service desk) முழுமையாக மேம்படுத்தவும், உலகளவில் இருக்கும் ஊழியர்களுக்கு தடையற்ற, ரியல் டைம் அடிப்படையிலான ஐடி சப்போர்ட் சேவையை வழங்க இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் விப்ரோ நிறுவனம், 130 நாடுகளில் பணிபுரியும் சுமார் 86,700 ஊழியர்களைக் கொண்ட நோக்கியா நிறுவனத்திற்காக "பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவு (AI) திறன் கொண்ட கிளவுட் சேவை உருவாக்க உள்ளது " என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் நிதி விவரங்கள் இரு நிறுவனங்களாலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த ஒப்பந்தம் பல கோடி மதிப்புடையதாக இருக்கும், இது விப்ரோ-வின் புதிய நிர்வாகத்திற்கு முக்கிய உந்து சக்தியாக இருக்கும்.
பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதிலும், அதை நடைமுறைப்படுத்துவதிலும் நிபுணத்துவம் பெற்ற விப்ரோ நிறுவனத்தின் கிளை நிறுவனமான Designit, நோக்கியா நிறுவனத்தின் சேவையில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் நார்டிக் பிரிவின் நிர்வாக இயக்குநர் வினய் பிரேக் கூறுகையில், டிஜிட்டல் வொர்க்ஸ்பேஸ் பிரிவில் ஏஐ முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறியுள்ளார்.
விப்ரோ நிறுவனத்தின் புதிய சிஇஓ-வான ஸ்ரீனிவாஸ் பல்லியா பதவியில் இருக்கும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கான அதிகபட்ச ஊதியமாக 7 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீனிவாஸ் பல்லியா-வின் வருடாந்திர அடிப்படை ஊதியம் $1,750,000 முதல் $3,000,000 வரை இருக்கும் என்றும், இலக்கு சார்ந்த வேரியபிள் ஊதியம் ஆண்டுக்கு $1,750,000 முதல் $3,000,000 வரை இருக்கும் என்றும் விப்ரோ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications