இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ இன்று வெளியிட்ட காலாண்டு முடிவுகளில் அதிர்ச்சி அளிக்கும் விஷயத்தை வெளியிட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஐடி சேவை நிறுவனங்கள் அதிகளவில் ஊழியர்களை பணியில் சேர்க்காத விஷயம் எல்லோருக்கும் தெரியும், ஆனால் விப்ரோ கடந்த 3 வருடத்தில் இல்லாத வகையில் ஊழியர்கள் எண்ணிக்கை இந்த செப்டம்பர் காலாண்டில் குறைந்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட காலாண்டு முடிவில் விப்ரோ நிறுவனத்தில் செப்டம்பர் காலாண்டில் மட்டும் ஊழியர்கள் எண்ணிக்கை 6716 பேர் குறைந்துள்ளது. இதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,36,328 ஆக குறைந்துள்ளது. மேலும் இக்காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதங்கள் 13.9 சதவீதத்தில் இருந்து 13.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
குறைக்கப்பட்ட 6716 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களா அல்லது தானாக நிறுவனத்தை விட்டு வெளியேறியவர்களாக என்பதை விப்ரோ நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
மேலும் 2027ஆம் ஆண்டில் பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்காத விப்ரோ, 2026ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட கிட்டத்தட்ட 7000 ஊழியர்கள் பணியில் நியமனம் செய்யக் காத்திருப்பதாகத் விப்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த லாபம் 1.4 சதவீதம் குறைந்து 3,201 கோடி ரூபாயாக உள்ளது, இதுவே ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் 4.7 சதவீதம் குறைந்துள்ளது.
இதை தொடர்ந்து இக்காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 9.1 சதவீதம் குறைந்து 24,752.7 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் காலாண்டு அடிப்படையில் பார்க்கும் போது 1.1 சதவீதம் சரிந்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனி பாலியா கூறுகையில் நிறுவனத்தின் புதிய முதலீடுகள் பலன் அளிக்கவும், புதிய வர்த்தக சந்தையில் வர்த்தகத்தைப் பெறவும் துவங்கியுள்ளது என தெரிவித்தார்.
மேலும் இவர் பேசுகையில் எங்கள் நிறுவனத்தின் கண்சல்டிங் அடிப்படையிலான ஏஐ கொள்கை பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது என தெரிவித்தார். மேலும் ஏஐ எங்களுடைய நீண்ட கால வளர்ச்சி ஆயுதமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் காலாண்டு அடிப்படையில் 0.5 சதவீதம் அதிகரித்து தற்போது 16.5 சதவீதமாக உள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை 1.82 சதவீதம் அதிகரித்து 174.05 ரூபாயாக உள்ளது, ஆனால் 2026ஆம் ஆண்டில் மட்டும் விப்ரோ 35 சதவீதம் சரிவைச் சந்தித்து வருகிறது. இது இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் அதிகப்படியான சரிவாகும்.


Click it and Unblock the Notifications