இந்தியாவின் முன்னணி IT தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளது. பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட விப்ரோ நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், வாரத்திற்கு குறைந்தது 3 நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று கூறியுள்ளது. இல்லையெனில், விடுமுறையை இழக்க வேண்டும். மேலும், HR டீமில் இருப்பவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய ஊழியர்களின் கோரிக்கைகளை அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2-ஆம் தேதி அன்று ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், HR டீமில் இருப்பவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய ஊழியர்களின் கோரிக்கைகளை அனுமதிக்கக்கூடாது என்று விப்ரோ நிறுவனம் கூறியுள்ளதாக மின்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வொர்க் ஃப்ரம் ஹோம் செய்ய வேண்டும் என்று கோரப்படும் அனுமதிகளை வழங்க வேண்டாம். அவற்றை உடனடியாக ரத்து செய்யவும். வாரத்திற்கு குறைந்தது மூன்று நாட்களாவது இங்கு பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் வராததற்கான ஒவ்வொரு நாளும் அவர்களுடைய விடுமுறை நாட்களில் கழிக்கப்படும் என்று நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகள் சில ஊழியர்களுக்கு மட்டுமே என்றும், அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ், எல்டிஐ மைண்ட்ட்ரீ மற்றும் பிற IT நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகத்திற்குத் திரும்பச் சொல்கின்றன.
சமீபத்தில், எல்டிஐ மைண்ட்ட்ரீ விடுமுறையை ஊழியர் வருகையுடன் இணைத்தது. 3 நாட்கள் அலுவலகத்திற்கு வராத ஊழியர்களுக்கு, ஒரு நாள் விடுமுறை கழிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
தற்போது பல நிறுவனங்களும் ஊழியர்களை நிறுவனத்திற்கு வந்து பணிபுரிய அழைக்கின்றன. இன்ஃபோசிஸ் தனது ஊழியர்களை வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களுக்கு அலுவலகத்தில் இருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
கோவிட் தொற்று ஏற்பட்டபோது பல நிறுவனங்களும் வொர்க் ப்ரம் ஹோமை கட்டாயமாக்கியது. இதன் காரணமாக பல ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை பார்த்தனர். சில நிறுவனங்கள் தங்களின் செலவைக் குறைக்கும் நோக்கத்துடனும் வொர்க் ப்ரம் ஹோமை வழங்கினர். ஆனால் தற்போது அனைத்தும் இயல்பு நிலைக்கு மாறியதன் காரணமாக பல முன்னணி ஐடி நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்கச் சொல்கின்றன.
சில நிறுவனங்கள் இதற்கு முன்னரே ஊழியர்களை அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்தது. இதில் தற்போது விப்ரோ நிறுவனமும் இணைந்துள்ளது. அலுவலகத்திற்கு வந்து பணிபுரியாத ஒவ்வொரு நாட்களும் விடுமுறையோடு கழிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications